மகள் ஆடிய நாடகம் - அதிகாரிகளின் தந்திரத்தினால் அம்பலம்
உடல் அடக்கம் செய்யப்பட்டு 7 நாட்களில், பாடசாலை கல்விசார ஊழியரான பெண்ணே இவ்வாறு கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தையின் வங்கிக்கணக்குகளில் இருக்கும் சுமார் ஒரு கோடி ரூபா பணம் மற்றும் காணிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மகள், 23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி மகள், தந்தை இருதய நோய்க்காக எடுத்துக்கொண்ட மருந்துகள், ஆவணங்களை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்து அழுது புலம்பியவாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் மரண பரிசோதனைக்கு சென்ற பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து இரகசியமான முறையில் மேற்கொண்ட பிரேதப்பரிசோதனையில் அவர் நோய் காரணமாக இறக்கவில்லை, கொலை என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபரான மகளது தொலைபேசிக்கு உள்வந்த மற்றும் வெளி சென்ற அழைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அம்பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தாயான மகள், வங்கிகளில் இருக்கும் பணம், காணிகளுக்கு ஆசைப்பட்டு, நவீன மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆசையில் இருந்த பெந்தோட்டை மிரிஸ்வத்தை பிரதேசத்தை 23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தந்தையை தனியாக வீட்டில் தங்க வைத்து விட்டு,ஹிக்கடுவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக மகள் தனது மூன்று பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
தந்தை வீட்டில் தனியாக இருப்பதை மகள், தனது தொலைபேசி மூலம் அறிவித்து, வீட்டின் சாவி இருக்கும் இடத்தையும் கூறியுள்ளார். தந்தையை எவருக்கும் தெரியாமல் கொலை செய்தால், ஆசைப்படும் மோட்டார் சைக்கிளை வாங்கி தருவதாக பெண், இளைஞனுக்கு கூறியுள்ளார்.
இதனடிப்படையில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்றுள்ள இளைஞன், வீட்டை திறந்து, அறையில் உறங்கிக்கொண்டிருந்த நபரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.
கொலையை இயற்கையான மரணம் என்று காண்பிப்பதற்காக உடலை கட்டிலில் வைத்து விட்டு, எந்த சாட்சியங்களை மீதம் வைக்காது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இரவு இசை நிகழ்ச்சியை பார்த்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்த மகள், தந்தையின் உடல் அறையில் இருக்கும் போது இரவு உணவை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூடிமறைக்கப்படவிருந்த குற்றச் செயல் ஒன்று அதிகாரிகளின் தந்திரமான விசாரணை மூலம் கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். TW
Post a Comment