விபசாரத் தொழிலுக்காக பெண்களை கடத்தும் முகவர்கள் - விழிப்பாக இருங்கள்!
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழு ஓமானுக்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஓமானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி சில வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் பெண்களை அந்நாட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளன. அவர்களில் அநேகமானவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அங்குள்ள தொழில் முகவர் நிலையத்தில் பெண்களை வரிசைப்படுத்தி வயது, தோற்றத்திற்கு அமைய பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யப்பட்டமை பொலிசாரின் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடத்திச்செல்லப்படுகின்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள 90-க்கும் மேற்பட்ட பெண்களில் இந்த ஆட்கடத்தலில் சிக்கிய பெண்களும் இருப்பதாக ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அவலக் குரல்
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி ஓமானிலிருந்து 150 இற்கு மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பியுள்ளனர்.
அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள,தமிழ்,முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.
அதில் அவர்கள் தெரிவிப்பதாவது, “ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம்.
இலங்கையிலுள்ள ஏஜென்ஸியும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள ஏஜென்ஸியும் எங்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த ஏஜென்ஸிகள் எங்கள் ஒவ்வொரு பெண்ணின் சார்பாகவும் சுமார் 18 இலட்ச ரூபாவை வாங்கிக் கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.
கையில் பாஸ்போட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது. தொடர்பாடல் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ளக் கூடிய கைப்பேசிகளையும் நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்.
எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள். எமது தாய், தந்தையர், சகோதரங்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட எமக்குத் தெரியாது. ஏனென்றால் எங்களுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளும் மறுக்கப்பட்டு விட்டன.
சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.
நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.
மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப்படுகின்றோம்
நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலங் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்ககூட முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.
நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.
ஆனால் பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை, தந்தையை கணவனை, பிள்ளைகளை, உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவி செய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக நாங்கள் இங்கே துயரம் தாங்க முடியாமல் கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம். அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.
நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால் அங்கும் எங்கள் சார்பாக நீதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் நாங்கள் பெற்றுக் கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.
உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது இலங்கை முகவர்கள் எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாட்டிலுமுள்ள முகவர்களும் சுருட்டிக் கொள்கிறார்கள்.
இது ஒரு மோசடியும் மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும்.
எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுத்து எங்களது உறவுகளுடன் எங்களைச் சேர்ப்பிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இப்பொழுது அடிமைகளாக விற்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் 150 பேரைப் போல இன்னும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் அடிமைகளாக இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுவார்கள்.
இனிமேல் சுற்றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்களாக வர வேண்டாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவர் நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்யும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தம்
வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்யும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் துப்புரவு தொழிலாளர்களாகவும் பதிவு செய்யப்பட்டு ஓமானில் வேலைக்காக செல்லும் பெண்கள் – சுற்றுலா விசாவுடன் செல்வதற்கான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டிலிருந்து அனுப்பப்படுவோரின் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தகவல்களை வழங்காது விலகிச் செயற்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டுவேலை உள்ளிட்ட தொழில்களை தேடிச்செல்லும் இலங்கைப் பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்படும் வியாபாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர்கள் அடங்கிய குழுவொன்று ஓமானுக்கு சென்று இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இருவர் கைது
சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் துபாய்க்கு தொழிலுக்காக பெண்களை அனுப்பிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த பெண் ஒருவரை சுற்றுலா விசாவினூடாக துபாய்க்கு தொழிலுக்கு அனுப்பிய போதும், உறுதி வழங்கப்பட்டதற்கு அமைய தொழில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறையிலும் பெண் ஒருவர் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவரும் அவருக்கு உதவி செய்தவரும் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மூலம் தொழில்
தேடி செல்ல வேண்டாம்
சுற்றுலா விசா மூலம் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்றவர்களில் சிலர் தொழிலின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களும் வெளிநாடு சென்று உழைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் நோக்கத்தில் கொழும்புக்கு படையெடுத்துள்ளனர். குறிப்பாக முகவர் நிறுவனங்கள் அமைந்துள்ள புறக்கோட்டை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் போன்ற பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான பெண்களையும் ஆண்களையும் காண முடிகிறது. இவ்வாறு தொழில் தேடி வரும் பெண்களையும் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பெண்களையும் இலக்கு வைத்தே இக் கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுகிறது.
இது தொடர்பில் சமூகத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.- Vidivelli
Post a Comment