நாட்டை சீரழித்தவர்களே மீண்டும் புதிய முகங்களோடு, கொள்கைகள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது - இம்தியாஸ்
கடந்த கால தவறான தீர்மானங்களால் நாடு இழந்துள்ள நிதியை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான யோசனைகள் முன்வைக்கப்படாமை கவலைக்குரியது என்றும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு முதலீடுகளை எதிர்பார்ப்பது சாத்தியப்படாது என குறிப்பிட்ட அவர், நாட்டை சீரழித்தவர்களே மீண்டும் புதிய முகங்களோடு கொள்கைகள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று -21- இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்பி இவ்வாறு தெரிவித்தார்
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பல்வேறு சட்டங்களை உபயோகப்படுத்தி தமக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் வீதியில் இறங்கி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் தொடர்கின்றது. இத்தகைய செயல்பாடுகளால் இளைஞர்களின் சிறந்த காலத்தை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம்.
நாட்டில் மனித உரிமை மீறப்படுவது தொடர்பிலும் பொருளாதார மோசடிகள் தொடர்பிலும் ஜெனிவாவிலும் சர்வதேச ரீதியிலும் எமது நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களால் நாடு இழந்துள்ள நிதியை மீள பெற்றுக் கொள்வதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது. வரவு செலவுத் திட்டத்தில் கூட அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment