Header Ads



தென்னம் பூவாக தரையில் சிதறிக் கிடப்பதால், ஏமாற்றமடைந்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள்

 
பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள், கடந்த சில மாதங்களாக அமைதியாகியுள்ளனர். என்றாலும், மக்களை வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் மீண்டும் செய்தால், நாடு மீண்டும் குழப்பமடைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டுமல்ல அதிபர் பதவியையும் இழக்க நேரிடுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,


இனியும் தேர்தலை ஒத்திவைக்க முயன்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும். தேர்தலை ஒத்திவைத்தால், தற்போது எதிரணியில் உள்ள 16 கட்சிகளும் ஒன்றிணைந்து வீதியில் இறங்குவோமென ஒரே குரலில் கூறியுள்ளனர் என்றார்.


அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடியில் உள்ளது. சிகரெட் துண்டொன்றை வீசினாலும் வைக்கோல் பற்றியெறியும், அது பெரிய தீயை உண்டாக்கும். அந்தளவுக்கு சூடான நிலைமையாக நாட்டின் நிலைமை மாறிவிட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக மக்கள் அமைதியாக உள்ளனர்,


ஆனால் மக்களை வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் மீண்டும் செய்தால்,நாடு மீண்டும் குழப்பமடைந்து நாடாளுமன்ற அதிகாரம் மட்டுமல்ல அதிபர் பதவியையும் இழக்கும் அபாயம் உள்ளது என்றார்.


அதுமட்டுமல்ல, இலங்கை சர்வதேச சமூகத்தை பெரிதும் சார்ந்துள்ளது. இன்றும் நாங்கள் வெளிநாட்டு உதவியையே எதிர்பார்க்கிறோம். ஒருபுறம் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது, அதற்காக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிக்கின்றோம், மறுபுறம் மேலதிகமாக கடன்களை தேடிக்கொண்டுள்ளோம்.


அவ்வாறான நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அது தேசிய மற்றும் சர்வதேச தரப்பின் அழுத்தங்களோடு முடிவடைந்து, ஜனநாயகம் சார் கேள்விகள் எழும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில் மொட்டுக்கட்சி இன்று தென்னம் பூவாக தரையில் சிதறிக் கிடக்கிறது. அதனால்தான் ஏமாற்றமடைந்தவர்கள் எங்களிடம் வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எங்களை நன்கு அறிவார்கள். அதுமட்டுமல்ல 2019ல் செய்த தவறை மக்கள் திருத்திக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே மொட்டுக்கட்சியின் சிலர் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்றாலும் மக்கள் செல்லவில்லை என்றார்.

No comments

Powered by Blogger.