நாடாளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும்
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்கள் ஆணையை இழந்த நிலையில் உள்ளதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்து, உடனடியாக தேர்தலுக்குச் செல்லுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் சார்பில் அதன் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான் ஞாயிறன்று 06.11.2022 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது>
“தனிநபர்களின் தேவைகளுக்காகவே காலத்திற்குக் காலம் அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் அடிப்படையிலேயே இன்று 21ஏ என்கின்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால்> மக்கள் கடந்த பல மாதங்களாக நடாத்திய போராட்டங்களின் மூலம் மொத்த அரசியல் முறைமையையும் மாற்றக்கூடிய சமூக நல அரசியல் யாப்பு மாற்றத்தையே கோரியிருந்தனர். அவர்கள் ஜனாதிபதியை> பிரதமரை மாத்திரமன்றி நாடாளுமன்றத்தையே கலைத்து புதிய அரசியல் சீர்திருத்தத்தை செய்யும்படியே கோரியிருந்தனர்.
எனினும் கண்துடைப்பிற்காக ஒரு சில மாற்றங்களை மாத்திரம் செய்து மீண்டும் தங்களது அரசியல் நலன்களை பாதுகாக்கும் யாப்பு சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. எனவே மக்கள் ஆணை இல்லாத இந்த நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.
அத்துடன் நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்ஹ பதவியேற்ற போது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தன்னிடம் பல திட்டங்கள் இருப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் அவர் பதவியேற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் எதிர்பார்த்த வருமானங்களோ ஐஎம்எப் இன் கடனுதவிகளோ கிடைக்கப்பெறவில்லை.
பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சில காலங்களுக்கு மாத்திரம் நடைமுறையில் இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமானது> பிற்பட்ட காலங்களில் குறித்த 'ஷரத்து' மிக லாவகமாக நீக்கப்பட்டு நிலையான சட்டமாக இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்களும் தற்பொழுது இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுகின்ற எவராக இருப்பினும் அவர்களை கைது செய்வதற்கு வசதியான ஒரு சட்டமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment