Header Ads



இஸ்லாம் பாடப்புத்தக விநியோகத்தில் என்மீது குற்றம் சுமத்தப்படுகிறது - கல்வி அமைச்சர்


2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தப் பாடப்புத்தகங்களில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு இவ்விடயங்களை ஆராய்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு அப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டுள்ளது.


எவ்வாறாயினும், சில இணையத்தளங்களில் மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிப்பதாக தன் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.


´அனைத்து மதத்தினரினதும் உடன்பாட்டுடன் இந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. எல்லா மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நான் இதைச் செய்தேன். நான் தவறாக ஏதும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்த இணையத்தளம் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது. இதனை நிறுத்தாவிடின் சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும்´ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.