ஆளும் கட்சி உட்பட இன்று அரசியல் கட்சிகளின் விசேட கூட்டங்கள்
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று -14- நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று மாலை 05 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவு திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
நிதி அமைச்சு, மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்று சமர்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தை பரிசீலித்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.
இந்த கூட்டம் இன்று பிற்பகல் எதிர்கட்சித் தலைவரின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, வரவு – செலவு திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
Post a Comment