அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம்
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவு தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன் வைப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சிலர் நேற்று முற்பகல் (03) நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்தனர்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து கட்டளை சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான இச் சட்ட வரைவு அறிஞர்கள் குழுவின் பரிந்துரைக்கமைய தயாரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
இச்சட்டவரைவு பற்றி அமைச்சர்கள் குழு மற்றும் பாராளுமன்றத்தில் மேலும் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச் சட்டத்தை நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு திருத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட அறிஞர்கள் குழுவின் அறிக்கையின்படி புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதோடு இச் சட்ட வரைவு தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்சிலின் பணிப்பாளர் எம்.எச்.எம். நியாஸ், சட்டத்தரணி இஃப்ரானா இம்ரான், சட்டத்தரணி நுஸ்ரா சரூக், சட்டத்தரணி நளினி இளங்கோவன், ஊடகவியலாளர் ரவி மஹரூப் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Post a Comment