சஜித்துக்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது..? அவரே கூறுவதை கேளுங்கள்
மீண்டும் அமைச்சுச் சூதாட்டம் ஆரம்பமாகியுள்ளதாகவும்,பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரம் துவங்கியுள்ளதென்றும், அவ்வாறே மக்களால் துரத்தப்பட்ட ராஜபக்சர்களின் வேண்டுகோளுக்கினங்க அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்,அவ்வாறான ஊழல் பேர்வளிகளுடன் ஒரு போதும் ஐக்கிய மக்கள் சக்தியினதோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினதோ எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சேர மாட்டார்கள் என்பதனை நம்பிக்கையுடன் கூற முடியும் என மதவாச்சியில் இடம்பெற்ற தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு தேவையான பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் இவர்களின் செயற்பாட்டிற்கு மத்தியில்,
நாட்டின் சாதாரன மக்களுக்கு அன்றாட உணவு வேலையைத் தேடிக் கொள்வது சவாலாக மாறி உள்ளதாகவும்,அதற்கு அப்பால் தொழிலின்மை,போஷாக்கின்மை போன்ற காரணங்களால் மக்களின் வாழ்வு சீரழிந்து, நாட்டில் பொது மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
இன்றைய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பது மாத்திரமே தேவைப்பட்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சஜித்துக்கு சேவை செய்வதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது என்று கடந்த காலங்களில் கேள்வி எழுப்பியதை தாம் அறிந்ததாகவும், அவ்வாறனவர்களுக்கு சொல்லக் கூடிய இலகுவான பதிலானது,சஜித் பிரேமதாஸ ஒரு போதும் 10 வீதம் 20 வீதம் என்று கொமிஸ் எடுக்காதவர் என்பதால் செல்வந்தர்கள் தயக்கமின்றி வேலைத்திட்டங்களுக்கு தேவையான பணத்தினை வழங்குகிறார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறு கிடைக்கும் பணத்தைக் கூட நேரடியாக எடுக்காமல் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனம்,கணனி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதால் வெளிப்படத்தன்மையொன்று இருப்பதாகவும்,அதனால் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
ஏனைய கட்சிகள் கைவாறு அடித்துக் கொண்டாலும் நடைமுறையில் மக்களுக்கான வேலைத்திட்டங்களை செய்து காட்டியிருப்பது தற்போதைய எதிர்க்கட்சிதான் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் சுட்டிக் காட்டினார்.
Post a Comment