வரிச்சுமையால் மக்கள் உயிரிழக்க நேரிடும், திருடப்பட்ட பணத்தை மீள வழங்க வேண்டும் - பீரிஸ்
நாட்டில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, திருடப்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
வரம்பற்ற வரிச்சுமையால் எதிர்வரும் காலங்களில் மக்கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்த அவர், கடந்த காலங்களில் மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிக வரிச் சுமையை மக்கள் மீது சுமத்துவதை விடுத்து, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் திறைசேரியில் சேர்ப்பதன் மூலம் வருமானத்தைப் பெறுவதற்கான வழிகள் குறித்து அரசாங்கம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், புதிய களனி பாலத்துக்கும் அதுருகிரியவுக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் ஊழல் பேரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.
179 டொலருக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலக்கரியை 284 டொலர் என்ற விலையில் கொள்வனவு செய்துள்ளதாகவும் 63 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி குறித்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் நம்பிக்கையை பெற பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி திருடப்பட்ட பணத்தை மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்றார்.
Post a Comment