Header Ads



இஸ்லாம் பாடப் புத்தகங்களை விநியோகிக்க, கல்வி அமைச்சர் பணிப்பு


இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும்,  பாடப் புத்தகங்களில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநியோகம் செய்தல் தொடர்பில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச்.இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.


அந்தவகையில்,  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நேற்றைய தினம் (31) சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.


அதன் பிற்பாடு, இன்றைய தினம் (01) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலான நீதிக்கான மய்யத்தின் உறுப்பினர்களும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தினர். அதன்பின்னரே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார் என ரிஷாட் எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.