Header Ads



ஓமான் சென்ற முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட துயரம் - 90 பெண்கள் தங்கவைப்பு


தொழிலுக்காக ஓமானுக்கு பயணிக்கும் போது உரிய நடைமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாறு ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் இன்று அறிவித்துள்ளது.


சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச்செல்லப்படும் இலங்கை பெண்கள் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றமை தொடர்பிலான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 


சுற்றுலா விசாவில் அபுதாபி ஊடாக ஓமானுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கை பெண்கள் 12 பேர் தொடர்பாக கடந்த சில தினங்களாக நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வௌியிட்டு வருகிறது. 


அவர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.


சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச்செல்லப்படுகின்ற இலங்கை பெண்கள் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை குற்றப்புலனய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியானது.


நியூஸ்ஃபெஸ்டின் வௌிக்கொணர்வை அடுத்து,   பல்வேறு பகுதிகளில் இருந்து ஓமானுக்கு அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள் காணாமற்போயுள்ளமை மற்றும் தடுத்து வைக்கப்படடுள்ளமை தொடர்பில் தகவல்கள் பதிவாகி வருகின்றன.


மட்டக்களப்பு கோரளைப்பற்று வீதியில் வசிந்து வந்த பாத்திமா ...................... என்ற பெண் வேலைவாய்ப்பிற்காக கடந்த மார்ச் 6 ஆம் திகதி ஓமானுக்கு சென்றுள்ளார்.


ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர் தனது 22 வயதில் முகவர் நிறுவனம் ஒன்றின்  ஊடாக ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.


வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவர் சுற்றுலா விசாவில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை பின்னர் தெரியவந்ததாக உறவினர்கள் கூறினர். 


எவ்வாறாயினும், ஓமானில் தாம் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்நோக்கியதாக .................. தனது குடும்பத்தாருக்கு பல சந்தர்ப்பங்களில் WhatsApp மூலம் அறிவித்துள்ளார்.

 

சிறிது நாட்கள் சென்ற பின் தனது பிள்ளையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பாத்திமாவின் தாயார் தெரிவித்தார்.

 

பாத்திமா ஓமானில் துன்புறுத்தலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் மற்றைய பெண்ணும் WhatsApp மூலம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினையை விபரித்துள்ளார். 


பாத்திமாவிற்கு நான்கு சகோதர்கள் உள்ள நிலையில், அவரது மூத்த சகோதரியொருவரும் ஓமானுக்கு சென்று கடந்த 2020 ஆம் ஆண்டு துன்புறுத்தல் காரணமாக நாடு திரும்பியதாக பாத்திமா சகோதரி தெரிவித்தார். 


இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தாயார் குறிப்பிட்டார். 


மேற்படி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலக உத்தியோகத்தரிடம் வினவியபோது, பாத்திமா  தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்துடன் தொடர்புகொண்டு வினவியதாகவும் குறித்த பெண் தற்போது ஓமானிலுள்ள தூதரகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்ட விசாரணைகளில் தூதரகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு இல்லத்தின் அதிகாரியும் யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.


இதேவேளை, தூதரகத்தின் கீழுள்ள பாதுகாப்பு இல்லத்தில் 90 பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஓமானுக்கான இலங்கை தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தூதரகத்தின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்களிடம் போதியளவு பணம் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருந்து பெற்றுக்கொண்டமைக்கான கட்டணம்,  சுற்றுலா விசா காலம் நிறைவடைந்தும் தங்கியிருந்ததால் செலுத்த வேண்டிய அபராதம், கடவுச்சீட்டு கட்டணம், தொழில் முகவர் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம், ஓமானில் தொழில் வாய்ப்புகளுக்காக இந்த பெண்களை அழைத்துவர அனுசரணை வழங்கியவர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றை இவர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.


இதற்கான பணம் அவர்களிடம் இல்லை எனவும் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வருடத்தில் இத்தகைய 240 பேருக்கு தூதரகம் அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் ஓமானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.