Header Ads



காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 8 குழுக்கள் - விரைவில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு


காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.


மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.


வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


செட்டிகுளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமைக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.


செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.


மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் விளக்கமளித்ததுடன், அது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாத் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

19.11.2022


No comments

Powered by Blogger.