Header Ads



உலக மக்களின் எண்ணிக்கை 8 பில்லியனை எட்டியது - பாதிக்கு மேல் 8 நாடுகளிலேயே அடங்கியது


உலக மக்கள்தொகை 8 பில்லியனை எட்டியுள்ளது.  உலக மக்கள்தொகை 2022 நவம்பர் 15 ஆம் திகதி 8 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது. 


UN World Population Prospects 2022 – இன் கணிப்பின் படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகரித்து, உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும். 


பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடியாகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11 ஆம் திகதி ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. 


பூமிப்பந்து மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதியை ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடுள்ளார். 


நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது


என அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். 


எனினும் அவர் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். 


உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் கூட. நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது


என அவர் கூறியுள்ளார். 


2050 ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம்.


ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.


ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) தோன்றியதிலிருந்து, ஒரு பில்லியன் மக்கள் பூமியில் குடியேறுவதற்கு சுமார் 300,000 ஆண்டுகள் ஆனது.


உலக மக்கள்தொகை 1950-க்குப் பிறகு மிக மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருகிறது, அது 2020 இல் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.


இன்றைய தினத்தில் உலக மக்கள்தொகை 8 பில்லியனை எட்டியதால் நவம்பர் 15 ஆம் திகதியை "எட்டு பில்லியன்களின் நாள்"  (“Day of Eight Billion” ) என்று ஐ.நா அறிவித்துள்ளது. 


 

No comments

Powered by Blogger.