Header Ads



நீண்ட வருடங்களின் பின், குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை குவைத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.


தண்டனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் எதியோபியாவைச் சேர்ந்த பெண். இன்னொருவர் குவைத்தைச் சேர்ந்த பெண். இவர்களுடன் குவைத்தைச் சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் சிரியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர்.


கடைசியாக 2017 ஜனவரி 25-ஆம் திகதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில், 7 பேரை குவைத் நேற்று (15) தூக்கிலிட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றுப்படுதற்கு ஒருநாள் முன்னதாக சவுதியில் இரண்டு பாகிஸ்தானியர்கள் ஹெரோய்ன் கடத்தலுக்காக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.


இந்நிலையில், இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, ‘இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும் கீழ்த்தரமானவை’ என்று விமர்சித்துள்ளது.


ஆம்னெஸ்டியின் பிராந்திய துணை இயக்குநர் அம்னா குலேலி, "குவைத் அதிகாரிகள் மரண தண்டனைகள் நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்" என்றார். குவைத்தில் 1960 தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.