Header Ads



400 முஸ்லிம் குடும்பங்கள் நேரடி பாதிப்பு - மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் கோரிக்கை


கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை  அவர்களின்  பயன்பாட்டிற்கு மீள வழங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள்   மேற்கொள்ளாததினால்,  சுமார் 400 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மீனவக் குடும்பங்கள் உரிய வருமானமின்றி  கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களுக்கு  முகம் கொடுத்துவருவதாக உப்புக்குளம் அல் - அஸ்ஹர் மீனவர் சங்கத்தின் செயலாளர்  நூர்முகம்மட் முகம்மட் ஆலம் ஜப்னா முஸ்லிம்  செய்தித் தளத்திற்க்கு தகவல்  தெரிவித்தார்.

கடந்த 1999ஆம் ஆண்டு நிகழ்ந்த யுத்த நடவடிக்கைகள்  காரணமாக விடத்தல்தீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள்  மன்னார் நகருக்கு  அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இந்தநிலையில் மன்னார் நகருக்கு

வருகை தந்த   விடத்தல்தீவு மீனவர்களின் அன்றாட ஜீவியத்திற்காக,  மனிதாபிமான ரீதியில்  தற்காலிக அடிப்படையில் உப்புக்குளம் மீனவர்களினால் மன்னார்   கோந்தைப்பிட்டி மீன்பிடி  இறங்குதுறை விடத்தல்தீவு மீனவர்களின்  பயன்பாட்டிற்கு  வழங்கப்பட்டது. இவ்விதம்  வழங்கப்பட்ட  குறித்த இறங்குதுறையை சுமார் 20 வருடங்களுக்கும்  மேலாகப்  பயன்படுத்தி வரும் விடத்தல்தீவு மீனவர்கள், கோந்தைப்பிட்டி மீன்பிடி தளத்தினை உப்புக்குளம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு  மீளக் கையளிக்காது, முஸ்லிம் மீனவக் குடும்பங்களின் ஜீவதாரத்துடன்  விளையாடுவதாக ஜனாப் என்.எம்.முகம்மட் ஆலம் ஜப்னா முஸ்லிமிற்கு மேலும் குறிப்பிட்டார்.


மன்னார் உப்புக்குளம் அல்.அஸ்ஹர் மீனவர் சங்கத்தின் சார்பில் தானும், மன்னார் நகரில் வசிக்கும் முஸ்லிம் பிரமுகர்களும்  குறித்த கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை உப்புக்குளம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு மீள வழங்குமாறு கோரி அரச உயர் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கடற்றொழில் அமைச்சர் என பலதரப்பினரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தும், தமது கோரிகைகள் தொடர்ந்தும் உதாசினப்படுத்தப்படுவதாக

என்.எம் ஆலம் விசனம் தெரிவிக்கின்றார்.


வடக்கு கிழக்கில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 2009ஆம் ஆண்டு  மே மாதம் நிகழ்ந்த இறுதி யுத்தத்துடன்  நிறைவுக்கு வந்தது. இதனடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில், யுத்தத்தினால்  இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, தமது வழமையான சகஜ வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


இவ்வாறான நிலையில்  கடந்த 1999ஆம் ஆண்டு   நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகளினால் விடத்தல்தீவு கிராமத்தில் இருந்து மன்னார் நகருக்கு  அகதிகளாக இடம்பெயர்ந்த  அனைத்து தமிழ் குடும்பங்களும்  விடத்தல்தீவு கிராமத்தில் உள்ள அவர்களின் பூர்வீக இடங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  உரிய முறையில்  மீள்குடியேற்றம் 

செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கான உள்ளகக் கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசியத்  தேவைப்பாடுகள் அனைத்தும்   அரசினால் முழுமையாக பூர்த்தி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் விடத்தல்தீவில் தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் குடும்பங்கள்  தமது பரம்பரை  தொழில்களான மீன்பிடியையும் விவசாயத்தையும் விடத்தல்தீவில் மேற்கொண்டு, தமது ஜீவனோபாயத்தை  தற்போது எவ்வித தடங்களுமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர்.


எனினும் விடத்தல்தீவு மக்கள் கடந்த கால யுத்த நடவடிக்கையினால் தமது கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து மன்னார் தீவுப் பகுதியில் தற்காலிகமாக வசித்த  காலப்பகுதியில், அவர்களின் பயன்பாட்டிற்கு உப்புக்குளம் மீனவர்களினால் மனிதாபிமான ரீதியில் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த கோந்தைப்பிட்டி  மீன்பிடி இறங்குதுறையை இன்றுவரை மீளக்கையளிக்காது, தொடர்ச்சியாக அங்கிருந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதாக மன்னார் உப்புக்குளம் அல் - அஸ்ஹர் மீனவ சங்கத்தின் செயலாளர்  முகம்மது  ஆலம் குற்றம் சுமத்துகிறார்.


மன்னார் மாவட்டத்தில் இருந்து கடந்த 90 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பொழுது  உப்புக்குளம் முஸ்லிம் குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து அங்குள்ள அகதிகள் முகாமில் வசித்தனர். பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள்  தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியமர்ந்தனர். இதன் அடிப்படையில் மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மக்களும் 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கட்டம் கட்டமாக தமது பூர்வீக இடங்களில்  மீள்குடியேறினர். இந்த நிலையில் தற்போது மன்னார் உப்புக்குளம்  பகுதியில்  சுமார் 800ற்கும் அதிக முஸ்லிம் குடும்பத்தினர்  மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.


இவர்களில் சுமார் 400ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  கடற்றொழிலையும் அதனோடு சார்ந்த   கருவாடு பதனிடல் மற்றும்  கடலுணவு ஏற்றுமதி ஆகியவற்றை  தமது பரம்பரை  ஜீவதாரத் தொழிலாக கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களும், மன்னாரில் மீன்பிடியோடு தொடர்புடைய  ஏனைய குடும்பத்தினரும் தமது  ஜீவியத்துடனும், வாழ்வாதாரத்துடனும்  பின்னிப் பிணைந்துள்ள கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை  கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக 

பயன்படுத்தி வரும்

விடத்தல்தீவு மீனவர்கள் தம்மிடம்  மீளக்கையளிக்க வேண்டும் என தொடர்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


மேலும் மன்னார் உப்புக்குளம் தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள  கோந்தைப்பிட்டி  மீன்பிடி இறங்குதுறைக்கு அருகாமையில் அமைந்துள்ள

இலங்கை துறைமுகக் கூட்டுத்தாபனதிற்குச் சொந்தமான நிலப்பரப்பையும்,  விடத்தல்தீவு மீனவர்கள் சட்டவிரோதமாக கைவசப்படுத்துவதற்கு திரைமறைவில் காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் மன்னார்   உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும் மன்னார் நகரில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு உள்ள ஒரே ஒரு இறங்குத்துறையான கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்கு துறையை, தற்போது மன்னாரில் மீள்குடியேறி வசிக்கும் முஸ்லிம் மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில், குறித்த இறங்குதுறையுடன்  எவ்விதத்திலும் தொடர்பற்ற,   மன்னார் நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றருக்கு அப்பால்  உள்ள விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்  எவ்வித நியாயமான காரணமுமின்றி தொடர்சியாக பயன்படுத்துவதுடன், அதை தம்வசம் தொடர்ந்தும் வைத்திருப்பது எவ்விதத்திலும் நியாயமற்ற அநீதியான செயல்பாடு  என மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மீனவர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.


மேலும் மன்னார் கோந்தைப்பிட்டி இறங்குதுறையை விடத்தல்தீவு மீனவர்கள்  சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சர் மற்றும்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் அதனை மீண்டும் முஸ்லிம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  மேலும் அதுதொடர்பில் அவர்கள்   கடும் மெத்தனப்போக்கில் செயல்படுவது குறித்து மன்னார் மாவட்ட  முஸ்லிம் மீனவ சமூகம்  கடும் விசனமும், கவலையும் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள மிகப் பெரிய கிராமமே விடத்தல்தீவு ஆகும். கடந்த 90ஆம் ஆண்டு புலிகளினால்  வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வேளை,  மன்னார் விடத்தல்தீவு கிராமத்தில் உள்ள முஸ்லிம் குடும்பங்களும் அங்கிருந்து  வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து விடத்தல்தீவைச் சேர்ந்த   நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் மட்டுமே அக் கிராமத்தில்  தொடர்சியாக வசித்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடத்தல்தீவு உட்பட மன்னார் பெரும் நிலப்பரப்பு பிரதேசம்  விடுதலைப் புலிகள் அமைப்பின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து. இந்த நிலையில் கடற்புலிகளின் முக்கிய தளங்கள் விடத்தல்தீவு பகுதியில் இயங்கிவந்ததுடன், புலிகள் அமைப்பின்  வன்னி பிராந்தியத்திற்கான   முக்கிய விநியோகக் கட்டமைப்பு செயற்பாடுகளும் விடத்தல்தீவில் இருந்தே புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.


இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இராணுவத் தளமான தள்ளாடி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த 212 பிரிகேட் படையணிகள், யாழ்ப்பாணம்- மன்னார்  ஏ - 32 பிரதான வீதி ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான விடத்தல்தீவை நோக்கி பாரிய படை நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் இலங்கை இராணுவத்தின் குறித்த படை நகர்வினை தடுக்கும் வகையில் தள்ளாடி படை முகாம் மற்றும்  மாந்தைப் பகுதியில் உள்ள இலங்கை இராணுவத்தினரின்  பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை நோக்கி    விடத்தல்தீவில் இருந்து கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர்.


மேலும் புலிகளின் ஷெல் தாக்குதல்களையடுத்து படையினர் விடத்தல்தீவு பகுதியை நோக்கி மேற்கொண்ட பதில்  ஷெல் தாக்குதலில் விடத்தல்தீவில் உள்ள  பல வீடுகள் சேதமடைந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் படையினரின் உக்கிர ஷெல் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கமுடியாத விடத்தல்தீவு தமிழ் மக்கள் அங்குள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். இதன்போது  ஆலயப் பகுதியில் வீழ்ந்த  ஷெல்களினால்   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்  ஸ்தலத்திலேயே பலியாகினர்.


இவ்வாறான சூழ்நிலையில் தமது உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் விடத்தல்தீவைச் சேர்ந்த சுமார்  380ற்கும் மேற்பட்ட  தமிழ் குடும்பங்கள் கடல் வழியாக மன்னார் நகரின் பள்ளிமுனையில் தஞ்சம் அடைந்தனர். இத்தகைய நிலையில் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் அச்சமயம்  யூ.என்.சீ.ஆர் நிறுவனத்தின் அனுசரணையுடன், பேசாலையில் இயங்கிய திறந்தவெளி அகதிகள் முகாமில்(Oppen Refugees Centre) விடத்தல்தீவில் இருந்து வெளியேறிய தமிழ் மீனவக்குடும்பங்களை தங்கச்செய்தனர்.


இவ்விதம் பேசாலை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த விடத்தல்தீவு மீனவர்களுக்கு அவர்களின் ஜீவதாரத்திற்காக மன்னார் பள்ளிமுனை மீன்பிடித்துறையில் கடற்றொழில் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பேசாலை அகதிகள்  முகாமில் தங்கியிருந்தவாறு பள்ளிமுனை கடற்கரை ஊடாக மீன்பிடியில் ஈடுபட்ட விடத்தல்தீவு மீனவர்களுக்கும், பள்ளிமுனை மீனவர்களுக்கும் இடையில் மீன்பிடித்தல் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பின்னர்  அது பெரும் மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டதினால் விடத்தல்தீவு மீனவர்களுக்கு பள்ளிமுனையில் இருந்து தொழில் செய்ய   பள்ளிமுனை மீனவர்கள் அனுமதி மறுத்தனர்.


இதைத்தொடர்ந்து மன்னார் பணங்கட்டுகொட்டு மீனவர்களுடன் விடத்தல்தீவு மீனவர்கள் கலந்துரையாடியமைக்கு அமைய பணங்கட்டுகொட்டு மீனவர்கள் பயன்படுத்தும் மன்னார் பெரியகடை

மீன்பிடி இறங்குதுறையில் விடத்தல்தீவு மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளை நிறுத்தி தற்காலிகமாகக் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் விடத்தல்தீவு மீனவர்கள் பணங்கட்டுகொட்டு மீனவர்களுடனும்  முரண்பட்ட நிலையில், மன்னார் பெரியகடை மீன்பிடி இறங்குதுறையை

விடத்தல்தீவு மீனவர்கள்

பயன்படுத்த பணங்கட்டுக்கொட்டு மீனவர்கள் மறுத்ததுடன், விடத்தல்தீவு மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் பெரியகடை மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில்  பணங்கட்டுகொட்டு மீனவர்களினால் வெளியேற்றப்பட்டனர்.


மேலும் கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் உப்புக்குளம் மீனவர் சங்கத்தினருக்கும், விடத்தல்தீவு மீனவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையை  அடுத்து உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களால் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்ட கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை விடத்தல்தீவு மீனவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அச்சமயம் உப்புக்குளம் முஸ்லிம்  மக்களில் பெரும்பாலனோர் புத்தளம் கல்பிட்டி பகுதியில் இடம்பெயர்ந்து வசித்த நிலையில் அவர்களினால் இடம்பெயர்விற்கு முன்னர் பயன்படுத்திய கோந்தைப்பிட்டி இறங்குதுறையை  விடத்தல்தீவு மீனவர்களின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக வழங்குவதில்  எவ்வித பாதக நிலையும் இருக்கவில்லை.


எனினும்  விடத்தல்தீவு மீனவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட  கோந்தைப்பிட்டி இறங்குதுறையை பயன்படுத்துவதற்கான அனுமதி காலம் கடந்த 2005 ஜூன் மாதம் ஏழாம் திகதியுடன் முடிவடைந்திருந்தது. இந்தநிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் உப்புக்குளம் மீனவர் சங்கத்திற்கு தொடர்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2006ஆம் ஆண்டு வரை மேலும் ஒரு வருடத்திற்கு  கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறை விடத்தல்தீவு மீனவர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.


இந்த நிலையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வரும் வரை கோந்தப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை விடத்தல்தீவு மீனவர்கள் பயன்படுத்துவதற்கு உப்புக்குளம் மீனவர்களினால்  பல காலநீடிப்புகளும்,  பல அவகாசங்கள் வழங்குப்பட்டும்,  கோந்தைப்பிட்டி இறங்குதுறையில் இருந்து விடத்தல்தீவு மீனவர்கள் வெளியேறாது அடாத்தாக கடற்றொழில் தொழில் செய்து வருவது இனங்களுக்கிடையில் பெரும் முருகல் நிலையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.   


மேலும் கடந்த 1999ல்  விடத்தல்தீவு மீனவர்கள், மன்னாருக்கு   இடம்பெயர்ந்த வேளை அவர்களின் மதத்தைச்  சார்ந்த பள்ளிமுனை மற்றும்  பணங்கட்டுகொட்டு  மீனவர்கள் தமது மீன்பிடித்துறையை விடத்தல்தீவு மீனவர்கள் பயன்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்து,  அவர்களை குறுகிய காலப்பகுதியில் வெளியேற்றிய பொழுது உப்புக்குளம்  முஸ்லிம் மீனவர்கள்   நேசக்கரம் நீட்டி தமது மீன்பிடித்துறையை அவர்களுக்கு வழங்கி  இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  விடத்தல்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், அன்றாட ஜீவியத்திற்கு  வழி சமைத்து  பெருந்தன்மையுடன் செயல்பட்டனர். இந்த நிலையில் இதனை நன்றியுடன் கருத்தில்கொண்டு விடத்தல்தீவு மீனவர்கள் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை தாமதமின்றி உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களிடம் மீளக்கையளிக்க முன்வருதல் வேண்டும் என  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.