இலங்கையில் இதுவரை அகற்றப்பட்டுள்ள கண்ணி வெடிகள் எத்தனை தெரியுமா..? 2026இல் கண்ணி வெடிகள் இல்லாத நாடு
இதுவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குறித்த காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் மீள்குடியேற்றப் பிரிவு கூறுகிறது.
கண்ணிவெடிகளை அகற்றும் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 ராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன், வெடிக்காத 3 லட்சத்து 65 ஆயிரத்து 403 ராணுவ வெடி பொருட்களும், 11 லட்சத்து 84 ஆயிரத்து 823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அதன்படி, ஜூன் 2027ஆம் ஆண்டுக்குள், இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.
இந்த நிலையில், "கண்ணிவெடிகளை அகற்றும் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும்" என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார்.
இலங்கை பூராகவும் கண்ணிவெடி அகற்றும் திட்டம் 2002ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக மீள்குடியேற்றப் பிரிவு கூறுகிறது.
கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்திக் கண்காணிக்கும் நடவடிக்கையினை - 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்' மேற்கொள்கிறது. இதற்கு இலங்கை ராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.
தற்போது இலங்கை ராணுவத்தின் 'மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு'க்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக, இலங்கை ராணுவத்தின் மனிதாபிமான நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு இலங்கை அரசு நிதியுதவி வழங்குகிறது.
மற்றைய நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் - சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது.
கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய ராணுவ வெடி பொருட்கள் - பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக, ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்பவதாக மீள்குடியேற்றப் பிரிவு குறிப்பிடுகிறது.
இதேவேளை, நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்றப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment