Header Ads



வங்கியொன்றின் 2 கணக்குகளை ஊடுருவி 13,765,000 ரூபா மோசடி


 இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்தமை தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இணைய வங்கி பரிவர்த்தனை வசதியின் கீழ் உள்ள தனியார் வங்கியொன்றின் இரண்டு கணக்குகளை ஊடுருவி 13,765,000 ரூபா மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதன்படி, நவம்பர் 26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாத்துவை, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் வைத்து பண மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாத்துவை மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.