தேர்தலை விட பெரும்போக அறுவடையே முக்கியம்; தேர்தல்கள் நடத்த வேண்டாம் - அரசுக்கு அறிவுறுத்தல்
(தினகரன்)
உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் அடுத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு நிறைவடையும் வரை நடத்த வேண்டாமென விவசாய சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெரும்போக அறுவடை நடைபெறும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படுமானால் பெரும்போக அறுவடை நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் பெரும் தடை ஏற்பட்டுவிடுமென்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அரசு முன்னெடுத்துள்ள உர விநியோக திட்டத்தின் கீழ் இம் முறை பெரும்போகத்துக்கு தேவையான உரம், மற்றும் களை நாசினிகள், கிருமி நாசினிகள் இறக்குமதி செய்யவும் விநியோகிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்ைககளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய நிலையில் தேர்தலை விட பெரும்போக அறுவடையை வெற்றிகரமாக நிறைவு செய்வது மட்டுமல்ல நாட்டின் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே பிரதானமான காரணமென பேராதனை விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.
விவசாயிகளை பாதுகாப்பதன் மூலமே அவர்களது மனோ வலிமையை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் முடியும். இதனூடாக மக்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய விதத்தில் அவர்களை ஊக்குவிக்கவும் முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அரசியல்வாதிகளையும் தலைமைத்துவம் ஏற்க வைப்பதுடன் விவசாயிகளை, கமத்தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபட வைக்கக்கூடிய தீர்மானங்களையும் எடுக்க அவர்கள் முன்வர வேண்டும்.
இம் முறை ‘உலக உணவு தினம்’ 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வேளையில் உணவுப் பாதுகாப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான உணவு பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டுமானால் எதிர்வரும் பெரும்போக அறுவடையை எவ்வாறெனினும் வெற்றிபெறச்செய்தே ஆகவேண்டுமென்றும் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.
கடந்த சிறுபோகத்தின்போது நாங்கள் எதிர்பார்த்த அறுவடையை வெற்றிகொள்ள முடியாமல் போனது. இதனால் நாட்டுக்குள் உணவு பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையை இழக்க வேண்டியிருந்தது. இதனை தடுக்கும் நோக்குடன் தற்போது சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, அவர்களது குடும்பங்களின் வாழ்வியலை முழுமைப்படுத்தும் விதத்தில் நாம் கவனம் செலுத்தினால் நாட்டிலுள்ள மக்களுக்கான உணவு உற்பத்தியை ஊக்கிவிக்க முடியும். இவ்வாறான ஒரு பின்னணியில் நாடு இருந்தாலேயே அது சாத்தியமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment