பியுமாலியுடன் தொடர்பா..? மறுக்கும் அரசியல்வாதிகள்
பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியுடன் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்யவுள்ளதாக தயாசிரி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, திலினி பியுமாலிவுடன் தொடர்பிருப்பதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணுடன் ஓமல்பே சோபித்த தேரருக்கு தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் குறித்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்றினை நடத்திய திலினி பியுமாலி, பல வர்த்தகர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திலினி பியுமாலியுடன், தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்று ராஜபக்ச தரப்பினர் அறிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
திலினி பியுமாலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த செய்தியும் அதனுடன் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களும் ஆதாரமற்றவை என்று ராஜபக்ச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளில் பியுமாலியும் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்ச அலுவலகம், குறித்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே, ஷிரந்தி ராஜபக்ஷ அந்த நிகழ்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 226 மில்லியன் ரூபா, 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment