Header Ads



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இப்படியும் நடக்கிறது


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளைப் பார்வையிட வருவோரின் பணப்பைகள், அலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டமையால் வைத்தியசாலையில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வைத்தியசாலை ஊழியர்களைப் போல உடைகளை அணிந்துவரும் போதைக்கு அடிமையான நபர்களால், நோயாளிகள் உடமைகள் திருடப்படுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

இவ்வாறான திருட்டு சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வைத்தியசாலையில் தற்போதுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு மேலதிகமாக பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறு, பொலிஸ் பிரதானிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.


எனினும், போராட்டங்களை கட்டுப்படுத்துவதில் அதிகளவான பொலிஸார் செயற்படுத்தப்பட்டு வருவதால்  குறித்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறினார்.


அதன்பின்னர், வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்புக் அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.


இந்த திருட்டுகளுக்கு வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்களும் துணைபோவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் சம்பவங்கள் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.


திருட்டில் ஈடுபட்ட பலரை வைத்தியசாலை ஊழியர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வருகை தந்து தகவல்களை பதிவு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.