Header Ads



வீடு வீடாக கொண்டு வரப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் - மனோ


வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட  கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும்  பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம். 


இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர். 


ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் ஏகநாயக இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார். 


“பொலிஸுக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு பொலிஸ் ராஜ்யம் அல்ல. பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. " 


"ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற  அவசர காலங்கள் அல்ல. போர் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்த காலத்திலேயே இதை பொறுத்துக்கொள்ளாதவன், நான். இன்று இந்த சமாதான காலத்தில் இந்த பொலிஸ் படிவங்களை வீடு வீடாக கொண்டு சென்று பதிவு செய்வதா?  உடன் நிறுத்துங்கள்!”, என சம்பந்தபட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன். 


“அரகல”காரர்களை கொழும்பில் வீடு வீடாக தேடுவதாக ஒரு பொலிஸ் நிலைய அதிகாரி என்னிடம் சொன்னார். அவருக்கு நான் என்ன பதில் கூறினேன் என்பதை பகிரங்கமாக கூற முடியாது.  


அரகலையை வெள்ளவத்தை, பம்பலபிட்டியில் தேட வேண்டாம் எனவும் இவருக்கு கூறினேன். அதை எங்கே தேட வேண்டும் எனவும் கூறினேன். 


கொழும்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடருமானால், அவற்றை உடன் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என ஊடகங்களை கோருகிறேன். 


நமது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நாம் உடன் நடவடிக்கை எடுப்போம். 


இதுபற்றி, பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்னாண்டோ, கொழும்பு பிரதி பொலிஸ் மாதிபர் சந்திரக்குமார, வெள்ளவத்தை பொறுப்பதிகாரி பிரசாந்த சில்வா, பம்பலபிட்டி பொறுப்பதிகாரி பத்மலால்  ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.