குமார வெல்கம தெரிவித்துள்ள விடயங்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பலவீனமான அரச தலைவராகவே பதவி விலகினார். அவர் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்கள் இன்று முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியதால் மகிந்த ராஜபக்சவின் அரசியல் புகழுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ராஜபக்சர்கள் படுதோல்வியடைவார்கள்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்ப ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் இன்று முழு நாட்டுக்கும் பாரியதொரு வினையாக மாறியுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போது தனது சகோதரரான கோட்டாபயவை வேட்பாளராக களமிறக்குவதாக அறிவித்ததற்கு நான் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினேன்.
பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத ஒருவர் எமது நாட்டின் அரசியல் நிர்வாக கட்டமைப்பில் பிரகாரம் அரச தலைவராக செயற்பட முடியாது, ஆகவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு நான் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துரைத்தேன்.
குடும்ப ஆலோசனைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் மாற்றி கொள்ளவில்லை. நான் குறிப்பிட்டவை இரண்டரை வருடகாலத்திற்குள் உண்மையானது.
கோட்டாபய ராஜபக்ச பலவீனமான அரச தலைவராகவே பதவி விலகினார். அவர் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்கள் இன்று முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர் எவ்வித குறையுமின்றி அரச வரபிரசாதங்களுடன் சுகபோகமாக வாழ்கிறார்.
கோட்டாபய ராஜபக்சவினால், மகிந்த ராஜபக்சவின் புகழுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ராஜபக்சர்கள் படுதோல்வியடைவார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது.
கட்சி தலைவரின் கருத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மதிப்பளிப்பதில்லை. சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் புதிய லங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைவார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment