Header Ads



வைத்திய அதிகாரி ஜலீலாவின் 'சிறகு முளைத்த மீன்;'


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


பெண்கள் தமக்கான முன்னேற்றத்தின் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஹயாத்து முஹம்மது ஜலீலா முஸம்மில் தெரிவித்தார்.


அவர் எழுதி வெளிட்டு வைத்த “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூல் ஏற்புரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலையத்தில் ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆசிரியை என்.எம். ஆரிபா  தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் ஜலீலா,


சமகாலத்தில் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கின்றது. வரையறைகளை தகர்க்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் மீது விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த விமர்சனங்களில் அர்த்தமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பெண்களுக்கான வெளிப்படை உலகம் முன்னரைக் காட்டிலும் இப்பொழுது பரந்து விரிந்து கிடக்கிறது. அது ஈர்க்கிறது. திசை காட்டுகிறது. பெண்களது ஆற்றல்கள் படைப்புக்களாக சுதந்திரமாக வெளி வந்தவண்ணமுள்ளன. பெண்களது பார்வை கூர்மையடைந்திருக்கின்றது.


ஆற்றலை வெளிக்காட்டும் பெண்களை அடக்கி வைக்கத் தேவையில்லை. மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதே உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும். பெண்களையும் சக மனிதர்களாக ஆற்றலுள்ளவர்களாக அறிவுள்ளவர்களாக அங்கீகரியுங்கள்.


எவ்வளவுதான் திறமைகளைப் பெண்கள் கொண்டிருந்தாலும் திருமணம் என்ற கட்டமைப்புக்குள் அகப்பட்ட பின்னர் பெண்களின் ஆற்றல்கள் அதன் பின் முடங்கி விடுகின்றன. இது தான் யதார்த்தம்.


பெண்களுக்கு வேலைப்பளுக்கள் அதிகரிப்பு இதற்கு ஒரு காரணம். இது போன்ற பல்வேறு காரணங்கள். ஆனாலும் இத்தகைய தடைகளையும் தாண்டி பெண்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்து எழுந்து நிற்கிறார்கள். அதனை மழு மனது கொண்டு பாராட்டி ஊக்கப்படுத்துவது சமுதாயக் கடமையாகும்.” என்றார்.


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா,  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரும் வைத்தியரான நூலாசிரியரின் கணவருமான எஸ்.எச். முஸம்மில், கிளிநொச்சி மாவட்ட வன இலாகா அதிகாரி எம்.ஏ. லியாவுல் ஹக்கீம் ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழிம்  உட்பட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் வைத்தியர் ஜலீலா, வைத்துறைக்கு மேலதிகமாக அவர் இலக்கியத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தினால் “கவிமுகில்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


வைத்தியர் ஜலீலா எழுதிய இந்த கவிதை நூல் தொகுப்பில்; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தாயிற் சிறந்த கேடயமில்லை, சேற்றில் நின்று சோற்றைத் தருகிறார் உள்ளிட்ட சுமார் 85 தலைப்புக்களில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.


கவிதை நூலாசிரியர் வைத்தியர் ஜலீலா அலிகார் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மறைந்த யூ. ஹயாத்து முஹம்மதுவின் மகளாவார். இவரது கவிதைகள், ஆக்கங்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.





No comments

Powered by Blogger.