அழுது ஒப்பாரி வைத்தாலும், ராஜபக்ச பட்டாளம் மீளெழுச்சி பெற மக்கள் இடமளிக்கமாட்டார்கள்
அழுது ஒப்பாரி வைத்து என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்ச பட்டாளம் மீளெழுச்சி பெற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் களுத்துறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பில் எதிரணி எம்.பி. ராஜித சேனாரத்ன ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தாம் மீண்டெழுவார்கள் என்று கனவு காண்கின்றார்கள். அதைப் பறைச்சாற்றும் வகையிலேயே அவர்கள் களுத்துறையில் ஒன்றுகூடி ஊளையிட்டுள்ளார்கள்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்த ராஜபக்சக்களின் 'மொட்டு'க் குழுவினர் இன்று மூன்று தரப்புக்களாக பிளவடைந்து நின்று ஆளுக்கு ஆள் மாறி மாறி வசைபாடுகின்றனர்.
மகிந்த தரப்பு, விமல் தரப்பு, டலஸ் தரப்பு என்று 'மொட்டு'க் குழுவினர் பிளவடைந்து நின்றாலும் நாட்டை அழிவு நிலைக்குக் கொண்டு வந்ததுக்கு இந்த மூன்று தரப்பினரும் பொறுப்பு.
ராஜபக்சக்களின் சகாவான ரோஹித அபேகுணவர்தன இன்று கண்ணீர் விட்டழுது மக்களிடமிருந்து அனுதாப அலையைத் தேட முற்படுகின்றார்.
இதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது. அழுது குளறி ஒப்பாரி வைத்து என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்ச பட்டாளம் மீளெழுச்சி பெற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்" - என்றார்.
Post a Comment