அக்குறணை மண்ணுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் சொத்து வஹாப் மாஸ்டர்
அக்குறணையில் வஹாப்தீன் மாஸ்டர் என எல்லோரும் அன்பாக அழைக்கப்படும் உங்களுடைய உற்ற நண்பர் அவர்களுடைய கல்வி வாழ்க்கை தொடர்பில்?
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 1950 இல் இருந்து 1965 வரையிலும் ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் கற்றார். அதன் பின்பு ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்றது. உடற் கல்வி ஆசிரியராக யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை பெற்றுக் கொண்டார்.
அவர் கற்பித்த பாடசாலை,அவர் காட்டிய ஈடுபாடுகள் தொடர்பில் ?
1971 தொடக்கம் 2003 இல் ஓய்வு பெறும் வரையிலும் கடமைபுரிந்த பாடசாலைகளாக சம்மாந்துறை, அக்குறணை அஸ்ஹர், கஹட்டகஸ்திகிலிய, வரகாமுற, கலேவெல, ரஜ்ஜம்மான முதலிய பாடசாலைகளில் உடற் கல்வி ஆசிரியராகக் கடமையாற்றினார். அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் சிறிது காலம் பரிசோதகராகவும் சேவையாற்றியுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
வஹாப் மாஸ்டர் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி ?
அவர் தந்தையின் பெயர் முதுனே அடப்பாகெதர முஹம்மது முஹிதீன் மரிக்கார் மஸ்தான். இவர் 1888 இல் பிறந்தவர்.தாயின் பெயர் புத்தளமே கெதர ஹபீப் முஹம்மதுலெப்பை இஸ்வத் உம்மா. இவர் 1903 இல் பிறந்தவர். தந்தை இஸ்லாமிய மார்க்க முறைப்படி பலதார திருமணம் செய்து கொண்டவர். குடும்பத்தில் 25 சகோதர, சகோதரிகள், இவர் 1972 இல் சியம்பலாகஹகெதர அஹமத் முஹம்மது சித்தி நுவைதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.அதில் ஏழு பிள்ளைகள், 3 ஆண்களும் 4 பெண்களும் உள்ளனர்.
வஹாப் மாஸ்டர் பள்ளி நிர்வாகம்,அரசியல் மற்றும் பொது அமைப்புக்களில் பங்காற்றி வரும் முழு நேர தீவிரமான சமூகப் பணியாளர். அவர் ஆற்றி வரும் சமூகப் பணிகள் பற்றி கூறுவீர்களா?
முதலில் அவர் கற்ற பாடசாலையில் பழைய மாணவர்,ஆசிரியராக கடமையாற்றியவர். பெற்றார் சங்கச் செயலாளர் இவ்வாறு தான் கற்ற பாடசாலையிலும் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் எண்ணற்ற சமூகப் பங்களிப்பினை மேற்கொண்டு வருகிறார்.
அவர் பள்ளி நிர்வாகத்தில் ஆற்றி வரும் பதவிகள் பற்றிக் கூறுவீர்களா?
அக்குறணை மத்திய பள்ளியின் பொதுச் செயலாளர், அக்குறணை பைதுல் மால் உதவிச் செயலாளர் அஸ்னா பள்ளித் தலைவர், அஸ்னா நியாய சபைக் குழு பொறுப்பாளர், அஸ்னா பள்ளி கல்விக்குழுத் தலைவர். கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் தெழும்புகஹவத்த ஜும்ஆப் பள்ளி உறுப்பினர் போன்ற முக்கியமான பதவிகளை வகித்து வருகிறார். அவர் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மட்டும் நின்று விடாமல் அஸ்னாப் பள்ளிவாசலோடு தொடர்புபட்ட ஏனைய அமைப்புக்களோடு சேர்ந்து அவர் அரும்பணிகள் ஆற்றி வருகிறார். வெளிப்படையாகவே அவருடைய சமூகப் பணிகள் அமைந்துள்ளன.
அப்படியாயின் அஸ்னா பள்ளிவாசலின் ஆரம்ப கால வரலாறு குறித்து கூற முடியுமா?
அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம். எஸ். மாமா என எல்லோராலும் அழைக்கப்படுவார். அவர் பெயர் மீராசாயிப். சுமார் 7 மொழிகள் பேசக் கூடிய ஆற்றலைக் கொண்டவர். அக்குறணையைப் பொறுத்தவரையில் அவர் பெரியதொரு செல்வந்தராவார். ஒரு வியாபாரி. ஓர் ஆன்மீகவாதி. அக்குறணை தரீக்காவுக்காக 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவர் கலீபாவாக மரணம் அடையும் வரையிலும் பதவி வகித்து வந்தார். அவர் 1910 இல் பிறந்து 1981 இல் மரணம் எய்தினார். 1970 வரையிலும் இப்பிரதேசத்தில் நிகழும் முக்கியமான பிரதான நிகழ்வுகள் எல்லாம் அவருடைய தலைமையின் கீழ்தான் நடைபெற்றதாகக் கூறுவார்கள். இவருடைய கால கட்டத்தில் தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாம், தவ்ஹீத், ஜம்மிய்யதுல் உலமா போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட வில்லை எனலாம். தரீகா ஆன்மீகத்தின் மீது அதிகப் பற்று இருந்தமையால் அவர் ஒரு சமூகத் தலைவராக மதிக்கப்பட்டார். அவர் மேற்கத்தைய நாட்டவர்களுடைய ஆக்கிரமிப்புக் கால கட்டத்தில் இஸ்லாம் தொடர்பான அதிகளவு கல்வியைக் கற்று செயற்படத் தொடங்கினார். ஷரிஆ சட்டக் கலை நூல்களை நன்கு கற்றவர். அவை மாத்திரமல்ல தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.அவர் தரீக்காவாக இருந்தாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினார். இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹ் அவர்களை முழுமையாகப் பின்பற்றுகின்ற போக்கு இருந்தது. மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
இவர் அக்குறணை பாலிகா பாடசாலையை ஆரம்பிப்பதற்காக அவருடைய தாயின் சகோதரரி லத்தீபா உம்மா தன் கணவர் இறந்த பின்னர் தன்னுடைய காணியை பாடசாலைக்கு வழங்கி அக்குறணை பாலிகா பாடசாலையின் உருவாக்கத்திற்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். லத்தீபா உம்மா எம். எஸ் மாமாவுடன் தான் வாழ்ந்து வந்தார். 'எம். எஸ். மாமா' அவர்கள், தனக்குப் போதுமானளவு சொத்துக்கள் இருக்கின்றன. எமது கிராமத்தில் பாடசாலையொன்று இல்லை. லத்தீபா உம்மாவிடம் உள்ள காணியை பாடசாலைக்கு வழங்கும்படி பரிந்துரை செய்தார். அத்தாயார் 1930-−1940 இடைப்பட்ட காலப் பகுதியில் அக்காணியை எமது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் பாடசாலைக்கு எழுதி நன்கொடையாக வழங்கினார்.
அவர்கள் பாடசாலைக்கு காணி வழங்கியது மட்டுமல்ல இப்பாடசாலைக்குச் செல்வதற்கான வழி இருக்கவில்லை. வழியினை எம். எஸ் மாமா வழங்கியிருந்தார். 1942 இல் தான் தெலும்புகஹாவத்த என்ற வீதி உருவாக்கப்பட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒற்றையடிப்பாதை இருந்தது. அந்த வீதி இன்று பெரிய வீதியாக மாற்றம் பெற்றுள்ளது.
அவர் கல்விக்காக உழைத்ததோடு அஸ்னா பள்ளியின் உருவாக்கத்திற்கு உதவியாக இருந்துள்ளார். இப்பள்ளிவாசல் ஆரம்பிப்பதற்கான எல்லாக் கலந்துரையாடல்களும் அவரின் இல்லத்திலேயே இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் 1956 களில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் 1960 இல் கட்டட நிர்மாண வேலைப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 1967 இல் முதல் ஜும்ஆத் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பள்ளிவாசலின் ஒரு பகுதிக் காணியை 1960-4-20 அன்றைய தினத்தில் ஹபீப் முஹம்மது. கே. எம். எஸ், மொஹமட் (வி. எச்) நெய்னா முஹமட் எச். எம். மொஹிதீன் (கிராம சபைத் தலைவர் ) ஏ. ஏ. எம். அபூபக்கர் நன்கொடையாக வழங்கி வைத்தனர்.
அக்குறணை மண்ணுக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொண்டிருக்கின்ற புலவர் கஸாவத்தை ஆலிம் அப்பாவின் பேரப்பிள்ளைகளின் வழித்தோன்றலில் இப்பள்ளிவாசலின் நிர்வாகத் தலைமைத்துவம் ஆரம்பிக்கப்பட்டது.
1870-1936 களில் வாழ்ந்த முதுனே அடப்பலாகெதர கலீபா ஜமால்தீன் ஆலீம் அவர்களின் புதல்வனான முதுனே அடப்பலாகெதர ஹாஜி ஹாபிஸ் ஸஹீத் ஸவ்லதி ஆலீம் 1905-1984 கால கட்டத்தில் வாழ்ந்தவர்களாவர்.தாயார் பங்கராத்து வீட்டு அஸ்மா உம்மா. மனைவி கதீஜா உம்மா. இவர்களது மகனான இலங்கை நிருவாக அதிகாரி மு. அ. செய்யத் முஹம்மது ஜிப்ரி அடுத்த தலைமுறையாக பள்ளிவாயலின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்று ஊர் சமூகத்தின் மேம்பாட்டில் அக்கறை கொண்டு உழைத்து வந்துள்ளார்.
அஸ்னா பள்ளிவாசலின் முதல் நிர்வாக உறுப்பினர்களை சொல்ல முடியுமா?
நிச்சயமாக, தலைவர் எம். எஸ். எம். ஸஹீத் ஸவ்லதி. உப தலைவர் எம். ஜமால்தீன் பஹ்ஜி, பொருளாளர் எஸ். எம். முஹிதீன் (மீஸான்), உப பொருளாளர் ஈ. ஏ. பதுர்தீன், இணைச் செயலாளர்கள் எச். எம். எம். இஸ்மாயீல், எஸ். எல். எம். றசீத், என். எம். ஏ. முஹம்மது ஆகியோராவர்.இவர்களுடைய பள்ளிவாசலின் நிர்வாகப் பணிகளும் ஏனைய பொது சமூகப் பணிகளும் அக்குறணை மண்ணுக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
1960-−1984 வரையிலும் இப்பள்ளி வாசலின் ஸ்தாபகத் தலைவர் ஸஹீத் ஸவ்லதி ஆயுள் காலம் வரையிலும் பதவி வகித்துள்ளார். அதன் பின்பு இலங்கை நிருவாக உத்தியோகஸ்தர் எம். ஏ. ஜிப்ரி தலைவராக இருந்துள்ளார்.அதன் பின்பு மௌலவி எம். எஸ். எம். கஸ்ஸாலி
(காதியார்) அதன் பின்பு அதிபர் ஏ.சி. எம். பலீல்,மௌலவி சறூக் பஹ்ஜி, எம். எஸ். எம். கஸ்ஸாலி, சட்டத்தரணி அஸ்மி பாரூக், பீ. ஏ. சி. எம். ரமீம், நடப்பு வருடத் தலைவராக சட்டத்தரணி அஸ்மி பாரூக் அவர்கள் பதவி வகித்து வருகிறார்.இவ்வாறு இது வரை எட்டுத் தலைமைத்துவங்கள் இப்பள்ளிவாசலினை பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய அரசியல் பங்களிப்பு பற்றிக் கூறுவீர்களா?
1968, 1991, 1997, 2006 ஆகிய காலங்களில் பிரதேச சபையின் உறுப்பினராகவும் 1970-−1977 வரை உப தலைவர், 3 வருடங்கள் எதிர்க் கட்சியின் நிதிக்குழு அங்கத்தவர், சுற்றுச் சூழல் வீடமைப்பு குழுக்களின் தலைவர் ஆகிய பதவிகள் வகித்துள்ளார். 28 வருடங்கள் பிரதேச சபையின் உறுப்பினராகவும் 05 வருடங்கள் எதிர்க்கட்சியிலும் பதவி வகித்துள்ளார். இவர் நீண்டதொரு அரசியல் பங்களிப்பைச் செய்துள்ளார்.
அவருடைய சமூகப் பணி எனும் போது
சியா வைத்தியசாலையின் உத்தியோகப்பற்ற பார்வையாளர், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பிரத்தியேச் செயலாளர், முன்னாள் மறைந்த அமைச்சர் எம். எல். ஏ. காதரின் இணைப்பதிகாரி, அகில இலங்கை சமாதான நீதவான் குழு உறுப்பினர். அக்குறணை பிரதேச சர்வமதக் குழுக்களின் அங்கத்தவர். முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் ஆலோசகர், சுற்றாடல் அமைச்சின் உதவி ஆணையாளர் எனப் பல்வேறுபட்ட பதவிகளில் இருந்து கொண்டு சாதாரண பொது மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதிலும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் தன்னாலான பெரும் பங்களிப்பை சமூகத்திற்கு செய்துள்ளார். இவர் தனது வயதான காலத்திலும் தொடர்ச்சியாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறன்றமை இளம் சமூகப் பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் கடந்த காலங்களில் அக்குறணை மண்ணின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் அயாராது உழைத்த ஆளுமை என பெருவெளிச்சமாகத் தெரிகின்றது.
அந்த வகையில் அக்குறணை ஊர் வரலாற்று அமைப்புக் குழுவின் செயலாளராகவும், அக்குறணை பிரதேச சபை வரலாற்றுக்குழு அங்கத்தவராகவும் அக்குறணை பிரதேச சபை வாசிகசாலை உறுப்பினராகவும் தியாகச் சுடர் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், சமூகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் எனப் பல பரிமாணங்களில் சமூகத்திற்குப் பணியாற்ற தமக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திய ஒரு புகழ்பெற்ற மனிதராக வஹாப் மாஸ்டர் மதிக்கப்படுகிறார்.
இவர் மகன் முயிஸ் வஹாப்தீன் என்பவர் சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் நன்கு அறிந்த ஒருவர். அவர் பற்றிக் கூறுவீர்களா?
அவர் பிரான்ஸ் நாட்டில் குடும்ப சகிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெனிவா மனித உரிமைக்கான ஒரு செயற்பாட்டாளர். அவர் 2015 முதல் இன்று வரைக்கும் இலங்கை தொடர்பான அரசியல், சமூக, கலாசார கல்வி, மனித உரிமை தொடர்பான விடயங்களில் ஈடுபட்டு வருகின்ற ஒருவர். இவர் சர்வதேச உறவுகள் பற்றி முதுமாணிக் கற்கையை நிறைவு செய்து விட்டு விரிந்த அறிவுத் தேடலை மேற்கொள்ளும் வகையில் கலாநிதி பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இவருடைய செயற்பாடுகள் சமகாலத்தில் இனப்பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அரபு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே காணப்பட்ட முரண்பாட்டை சுமுகமாகத் தீர்ப்பதற்கு இலங்கை வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி அவர்களுடனும் அரபு நாடுகளுடைய ஓஐசி என்ற ஒபெக் அமைப்புடனும் கலந்துரையாடி இரு தரப்பினர்களுக்கிடையே சிறந்த நல்லுறவை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவருடைய மகள் செல்வி ஷமா முயிஸ் அவர்கள் பலஸ்தீனத்தில் நடக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராக ஜெனீவாவில் குரல் கொடுத்தவர். பலஸ்தீனத்தில் இஸ்ரவேலின் மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது மனித உரிமை மாநாட்டில் சிறுவர் பெண்கள் உரிமை பற்றி உரையாற்றி தான் பிறந்த அக்குறணை மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர். அது மட்டுமல்ல அங்கு கல்வியினை கற்று வரும் அவர் அந்நாட்டுத் தேர்தலிலும் போட்டியிடுவதற்குத் தயாராகிக் கொண்டு வருகிறார். அந்தவகையில் அரசியலில் சர்வதேச ரீதியாக அக்குறணை மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெண்மணி போட்டியிடப் போவதையிட்டு நாம் இரட்டிப்பு பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
கலந்துரையாடியவர்: இக்பால் அலி
Post a Comment