Header Ads



பசில் ஆத்திரத்தில் உள்ளார், எப்படியேனும் வீழத்த வேண்டுமென முயற்சிக்கிறார்


இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை மக்கள் சார்பாக தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறும்போது, பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மாறுபட்ட நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.


இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்வதை தாம் எதிர்ப்பதாகவும், நாட்டைப் பற்றி அக்கறையுள்ள, சிந்திக்கும் இலங்கையர்களே நாட்டை ஆள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


எந்தவொரு இரட்டைக் குடியுரிமை கொண்டவரும் இலங்கையை பற்றிச் சிந்திக்காமல், எதிர்காலத்தில் வேறு நாட்டிற்குச் சென்று, அவர்கள் விரும்பிய வழியில் செயற்பட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லாமல் போனதைக்கு 22வது திருத்தமே காரணமாக அமைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.


இதனால் முன்னாள் அமைச்சர் ராஜபக்சவின் கோபத்திற்கு ஆளாகியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பசில் ராஜபக்ச இருப்பதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இலங்கையில் உள்ள சிலர் நாட்டை இனவாதக் கருத்தாக்கத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சி குறித்து தாம் வருந்துவதாகத் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவும் இதில் குறுக்கிட்டு கருத்து வெளியிட்டார்.


இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த பதிலை அளித்தார்.

No comments

Powered by Blogger.