ஜனாதிபதியை 'திருடன்' என அழைத்த ராஜபக்சர்கள், தற்போது அவருக்காக புகழ் பாடுகின்றனர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொகுதி அமைப்பாளர் சன்ன கலப்பதி இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததோடு பெருமளவான ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
நம் நாட்டை அழித்த,நாட்டை வங்குரோத்தடையச் செய்த,நம் நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய இந்த ராஜபக்ச கும்பல், ஒன்றிணைந்து எழ மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது எனவும்,அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் அழிவிலிருந்து அழிவை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,முடிந்தால் தேர்தலை நடத்தி மக்களின் முடிவைப் பார்க்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறே,மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து,மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லும் தற்போதுள்ள ஒரே மாற்று அணி ஐக்கிய மக்கள் சக்தி என்பதனால் தேர்தலை நடத்தி மக்கள் அபிப்பிராயத்தைப் பார்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டையும் மக்களையும் அழித்து வங்குரோத்தடையச் செய்த மொட்டு,மீண்டும் ஒன்றிணைந்து களுத்தறையிலிருந்து எழுவோம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும்,நாட்டை அழித்து கருவிலிருக்கும் குழந்தையும்,கர்ப்பிணித் தாய்,சிறு குழந்தை முதல் பெரியவர் வரை சகலரையும் வக்குரோத்தடையச் செய்தது ராஜபக்ச குடும்பம் தலைமையிலான மொட்டு தான் எனவும்,அவர்களின் ஆணவம்,
தூர நோக்கு,வேலைத்திட்டம்,இலக்கு மற்றும் திறன் இன்மை காரணமாக பொய்யான நாடகங்களை உருவாக்கி நாட்டை குட்டிச்சுவராக்கிய ராஜபக்ச குடும்பமும் ஏனைய தலைவர்களும் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து எழுவோம் எனக் கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கோட்டாபய முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச முன்னைய கூட்டங்களில் கூறினாலும்,கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கழுத்தைப் பிடித்து நாட்டை விட்டும் துரத்தினார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,முன்னர் ரணிலை திட்டிய மஹிந்தர்கள் தற்போது ரணிலை புகழ் பாடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து புதிய சட்டங்களை கொண்டு வருவதாகவும்,அந்தச் சட்டங்கள் ஊடாக புனர்வாழ்வுப் பணியகத்தை நிறுவி,அதன் மூலம் போராடிய இளைஞர்களை சிறையில் அடைத்து,
அரச மிலேச்சத்தனத்தால் அடக்கி ஒடுக்க முயல்கின்றனர் எனவும்,அந்தப் புனர்வாழ்வு பணியக சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும்,அது அரசியலமைப்புக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது எனவும்,இவ்வாறான சட்டவிரோத வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்து நாட்டை அழிக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறே,பயங்கரவாதிகளை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம்,சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு மக்களின் ஜனநாயக ரீதியான இயல்பு வாழ்வை அழிக்க பயன்படுத்தப்படுகிறது எனவும்,இதற்கான உரிமை அரசுக்கு இல்லை என்றும்,இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் பிக்குகளைக் கூட சிறையில் அடைத்துள்ளதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்களின் துயரங்களுக்காகவும்,ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிய இளைஞர்களை சிறையில் அடைத்ததன் மூலம் அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2019 க்கு முன் மூன்று வேளையும் உணவுண்டு சந்தோசமாக வாழ்ந்த மக்கள் தற்போது ஒரு வேளை,இரண்டு வேளை உணவுடன் துயரத்தில் வாழ்கின்றனர் எனவும், தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாது போயுள்ள பின்னனியில், அமைச்சர்கள் வரிசையில் நின்று பதவிப் பிரமாணம் செய்து,நாட்டுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, காயத்திற்கு போட ஒரு கட்டுத்துணியைக் கூட எடுக்க முடியாத நிலையிலுள்ள நாட்டில் 38 இராஜாங்க அமைச்சர்கள் சுகபோகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment