Header Ads



கிரிக்கெட் ஸ்டம்பினால் கொலை செய்தவர், தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்


18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை கருத்தில் கொண்டு இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒருவரின் மரண தண்டனையை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயதுடைய குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தண்டனையின் 53வது பிரிவின் விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்வதைத் தவிர்க்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் ஸ்டம்பினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.


விசாரணையின் பின்னர் கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


எனினும் தண்டனையை ஆட்சேபித்து குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு, குற்றம் சாட்டப்படும் போது தீர்ப்பு வழங்கப்பட்டவருக்கு 15 வயது மாத்திரமே.  எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்று வாதிட்டார்.


இதனையடுத்து தணிக்கும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்தது.

No comments

Powered by Blogger.