ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான லேக் ஹவுஸ் காணியை, மீண்டும் லேக் ஹவுஸுக்கே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
லேக் ஹவுஸ் நிறுவனக் காணியை வெளிநாட்டுக் கம்பனிக்கோ அல்லது தனியாருக்கோ விற்பனை செய்வதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணியின் 99வருட குத்தகைக் காலம் நிறைவுறும் நிலையில் அதனை மீண்டும் லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கே பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று டபிள்யூ. எச். எம். தர்மசேன எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தர்மசேன எம்பி தமது கேள்வியின் போது,
பல்வேறு அரசியல் கட்சிகள் அது தொடர்பில் கூற்றுக்களை முன் வைத்துள்ளன. கடந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பல முக்கிய இடங்களை விற்பனை செய்வதற்குநடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றுதான் லேக் ஹவுஸ் நிறுவனமாகும். இந்த கூற்று சமூகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதனை வெளிநாட்டுக்கு வழங்கி அவர்கள் புனரமைப்பதை விட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அரசாங்கமே புனரமைத்து மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,பத்திரிகைகளின் தாய் வீடான லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் கடந்த அரசாங்கத்தின் காலத்திலோ அல்லது தற்போதைய அரசாங்கத்தினாலோ அதனை தனியாருக்கு அல்லது வெளிநாடொன்றுக்கு விற்பதற்கு எந்த வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான மேற்படி காணியை 99வருட குத்தகைக்கு டி .ஆர் விஜேவர்தன பெற்றுள்ள நிலையில்
அந்த குத்தகைக் காலம் நிறைவுற்றுள்ள நிலையில் அதனை அவரால் ஸ்தாபிக்கப்பட்ட லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கே மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான அந்த காணியை மீண்டும் ரயில்வே திணைக்களத்திற்கு சுவீகரித்துக் கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் அந்த நிறுவனத்தின் முன்னெடுப்புகளை ரயில்வே திணைக்களத்தின் கீழேயே முன்னெடுக்க வேண்டி வரும். அதனை தவிர்க்கும் வகையிலேயே லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கே மீண்டும் அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment