நிலச்சரிவில் தாயும், மகனும் சடலமாக மீட்பு - இளைய மகன் டியூசன் சென்ற வேளையில் சம்பவம்
வரக்காபொல, தும்பலியத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 4 பேரில் தாயும் மகனும் தற்போது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் கடும் மழை காரணமாக, நேற்றையதினம் (14) அகுருவெல்ல - வரக்காபொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு மாடி வீடொன்று முற்றாக புதையுண்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்த வந்த 4 பேரை தேடி மீட்புப் பணியில் இராணுவத்தினருடன், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டு வந்தனர்.
அதற்கமைய, குறித்த வீட்டில் வசித்து வந்த 50 வயதான தந்தை நேற்றையதினம் (14) உயிருடன் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது காலில் என்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஏனைய 3 பேரை தேடி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குறித்த அனர்த்தம் ஏற்பட்ட பிற்பகல் வேளையில் தனியார் வகுப்புக்குச் சென்ற 10 வயது இளைய மகன், நண்பர் ஒருவரது வீட்டில் உள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையை அடுத்து, இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் 47 வயதான தாயும் அதனைத் தொடர்ந்து 24 வயதான மகனும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள், வரக்காபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment