"நாட்டுக்கு இந்த நிலமை ஏற்பட, இதுதான் காரணம்"
இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு வைத்தியர் தனது தொழிலில் குறைவான வரியை செலுத்துவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொழில் வல்லுநர் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருந்தாலும், அவர்கள் எவ்வளவு செலுத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு சென்றால், அவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் வரி செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தரப்பினர் வேறொரு நாட்டுக்கு வரி செலுத்துவதாகவும் குறைந்த பட்சம் அந்த வரித் தொகையையாவது இலங்கைக்கு செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி வருமானம் குறைவடைந்தமையே இலங்கை எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை எனவும், இதன்காரணமாக அரசாங்கம் அடிப்படைத் தேவைகளுக்கு செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களுக்காக வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் வல்லுநர்கள் உட்பட அனைவரும் வருமான வரி செலுத்தியிருந்தால் இன்று இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment