ரணிலின் கனவுக்கு விழுந்தது பேரிடி - புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என உயர்நீதிமன்றின் வியாக்கியானம்
அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதால் அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையான உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்தின் ஊடாக போராட்டங்களை ஒடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் ரணில் திட்டமிட்டிருந்தார் என ஊடகங்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இராணுவத்தால் நடத்தப்படும் "புனர்வாழ்வு" மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் அறிவித்தது.
தடுத்து வைக்கப்படுபவர்கள், துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என அக்கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு, குறித்த புனர்வாழ்வு மையங்களில் "போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள்” வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.
புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது, "புனர்வாழ்வு" மையங்கள் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட, பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும்.
ஏற்கனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனித உரிமைகள் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
Post a Comment