Header Ads



ஞானசாரரின் நாச வேலையினால், நிர்க்கதியாகியுள்ள முஸ்லிம் மாணவர்கள்


இலங்கையின் அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் 6, 7, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இஸ்லாமை ஒரு பாடமாகப் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பாடநூல்கள் இல்லை என்ற விடயம் மனித உரிமை மீறல் விடயமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கல்வி வெளியீடுகள் துறையின் ஆணையர் நாயகம், இந்த பாடநூல்களை திரும்பப் பெறுமாறு அதிபர்களுக்கு உத்தரவிட்டதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, இந்த பாடநூல்களில் உள்ள சில விடயங்கள் குறித்து கவலை தெரிவித்ததை அடுத்தே, பாடநூல்கள் திரும்பப்பெறப்பட்டன.


இந்தநிலையில் நீதிக்கான மையம் என்ற சிவில் சமூக அமைப்பொன்று மாணவர்கள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளது.


அந்த முறைப்பாட்டில், பாடநூல்களை மறுபரிசீலனை செய்ய சட்ட அதிகாரமோ அல்லது அதிகாரமோ கலகொட அத்தே ஞானசார தேரரின் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த பாடநூல்கள் முதன்முதலில் 2015 இல் வெளியிடப்பட்டது மற்றும் பல முறை மறுபதிப்பும் செய்யப்பட்டன, ஒவ்வொரு முறையும் ஆணையாளரின் மேற்பார்வையிலேயே இது வெளியிடப்பட்டது.


இந்நிலையில் ஏதும் ஆட்சேபனை இருந்திருந்தால்,அதற்கு அவரே பொறுப்புக் கூறுவார் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த இஸ்லாம் பற்றிய பாடநூல்களை திரும்பப் பெறுவதற்கான முடிவில் ஒரு மறைமுகமான நோக்கம் இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு சிறு திருத்தங்களை அடுத்த மறுபதிப்பில் செய்திருக்கலாம் அல்லது பாடப்புத்தகங்களைப் பறிக்காமல் மாணவர்களுக்குத் தெரிவித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


பாடநூல்களை மீளப்பெற்றமை பாரபட்சமான முடிவாகும் என்று முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைக்கு முன்னர் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த மாதம், நூல்களை திணைக்களம் விநியோகிக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.