மார்பகம் (முலைவரி) அறிமுகப்படுத்துங்கள் - அரசுக்கு லால்காந்த ஆலோசனை
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் - முயற்சி ஒருபோதும் கைகூடாது. எனவே, ஜனநாயக ரீதியில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி தேர்தலாகும் என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (15) ஹட்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு, தற்போதைய ஆட்சியாளர்களால் இந்நாட்டை ஆள முடியவில்லை. அதனால்தான் மக்கள்மீது வரிச்சுமை திணிக்கப்படுகின்றது. ஒரிரு நாட்களுக்கு முன்னர்கூட புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆரம்பம் மட்டும்தான், அடுத்து வரும் நாட்களில் புதிய புதிய வரிகள் வரலாம். எனவே, இந்த அரசுக்கு வரி விதிப்பு குறித்து சில யோசனைகளை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
வெள்ளையர்கள் ஆட்சியில் சப்பாத்து வரி அறவிடப்பட்டது, முடிந்தால் அந்த வரியையும் அறவிட்டுக்கொள்ளுங்கள். வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கும் வரி விதிக்கப்பட்டது. எனவே, நாய்க்கும், பூனைக்கும் ஒரு வரியை அறிமுகப்படுத்திக்கொள்ளட்டும். முன்னர் முலைவரி என ஒன்றும் இருந்தது, அதையும் செயற்படுத்திக்கொள்ளட்டும். இப்படி வரிகளால் மட்டும் அரச நிர்வாகத்தை கொண்டு நடத்தவிட முடியாது. மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.
அதேவேளை, மக்கள் எழுச்சியை - கிளர்ச்சியை அடக்குமுறை முறை ஊடாக கட்டுப்படுத்தி அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திவிடலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்காது. எனவே, ஜனநாயக வழியில் நாம் பதிலலொன்றை எதிர்பார்க்கின்றோம். அதற்கான சிறந்த வழி தேர்தலாகும்.
ஜனநாயக வழியில் அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தினால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டார்கள் நாட்டுக்கு வருவார்கள் என்றார்.
Post a Comment