Header Ads



ஆளும்கட்சியின் குழுக்கூட்டத்தில் நடைபெற்றது என்ன..? விஜேதாச, அலி சப்ரி விடாப்பிடி - மொட்டு எதிர்ப்பு, ரணில் வழங்கிய வாக்குறுதி


நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தலைமையில் நேற்று -17- இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலம் இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.


எனினும், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அதனை நான்கரை வருடங்களாக அதிகரித்ததாகவும் அது குறித்து 22 ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாமை குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளனர்.


இதன்போது, பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் அதனை தாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ஆளும் கட்சியின் நேற்றைய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதன்போது, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்தை கொண்டு வர வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சஃப்ரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.