Header Ads



புதிய நீர் விநியோக இணைப்புக் கட்டணம் 70% ஆல் உயர்வடைந்தது


புதிய நீர் விநியோக இணைப்புக் கட்டணத்தை 70% ஆல் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


இன்று (18) முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு இணைப்புக்கட்டணம் அதிகரிப்பதாக சபை தெரிவித்துள்ளது.


அதற்கமைய,


1/2 அங்குல குழாய் விநியோகம்: ரூ. 16,000 இலிருந்து ரூ. 27,200 ஆக அதிகரிப்பு

3/4 அங்குல குழாய் விநியோகம்: ரூ. 30,000 இலிருந்து ரூ. 51,000 ஆக அதிகரிப்பு

இணைப்புக் கட்டணம் செலுத்தப்பட்டு 4 நாட்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.


ஏற்கனவே உள்ள வகையில், ஆரம்ப கட்டணமொன்றை செலுத்தி இணைப்பை பெற்றதன் பின்னர், தவணை முறையில் குறித்த இணைப்புக் கட்டணத்தை செலுத்த முடியுமென சபை சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, கடந்த செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில், இவ்வருடம் 150,000 புதிய இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக, சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


கடந்த 2021இல் 210,000 இணைப்புகளும், 2020 இல் 150,000 இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு குழாய் நீர் விநியோகத்தை மேற்கொண்டுள்ளதோடு, இது இலங்கை மக்கள் தொகையில் 41 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.

No comments

Powered by Blogger.