Header Ads



70 இலட்சம் ரூபாய் பெறுமதியான காரை 25 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடியுமா..?


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயன்ற கார் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


விலையுயர்ந்த கார் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் போவதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அங்கு சுமார் 70 இலட்சம் பெறுமதியான காரை சுமார் 25 இலட்சத்திற்கு விற்பனை செய்ய சந்தேக நபர் திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வளான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் காரை நாரஹேன்பிட்டி பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.


பின்னர் வலான ஊழல் தடுப்பு பிரிவினர் காரை கைப்பற்றி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


மேலும் வாகனத்தை சோதனையிட்டதில் காரின் செஸ்ஸி நம்பரை மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்திருப்பது தெரியவந்தது.


மேலும், குறித்த காருக்கு போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளதுடன், அது கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான காரின் இலக்கத் தகடு எனத் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபரிடம் மேலும் பல வாகனங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.