4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின, அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் தண்ணீரில் மிதப்பு
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தும் வகையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களிலும் நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை இதற்கு காரணமாகும். கடல் பிரதேசங்களில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை தடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் முதல் காலி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்களும் பல பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 87 குடும்பங்களைச் சேர்ந்த 407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிப்பென்ன நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு இடங்களில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு அல்லது காலி நோக்கி பயணிக்க விரும்பும் சாரதிகள் குருந்துகஹாதெக்ம அல்லது தொடங்கொட நுழைவாயிலை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment