Header Ads



'எவரையும் கைவிட மாட்டோம், எவரதும் பட்டினிக்கும் இடமளியோம்' என்ற குடும்ப நலன்புரி திட்டத்திற்கு 4 நாட்களில் 7 இலட்சம் விண்ணப்பம்


"எவரையும் கைவிட மாட்டோம், எவரதும் பட்டினிக்கும் இடமளியோம்" என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்தினால் 3.1 மில்லியன் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த 4 தினங்களில் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களை அனுப்பும் திகதி எதிர்வரும் அக்டோபர் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் 5000 ரூபா முதல் 15,000 ரூபா வரை அந்த கொடுப்பனவுகள் அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


திறைசேரியின் சமூக நலன்புரி சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி வேலைத் திட்டம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நிதியமைச்சு ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.


தற்போது நடைமுறையிலுள்ள சமூக நலன்புரி திட்டங்களான சமுர்த்தி, வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு, வலது குறைந்தோருக்கான கொடுப்பனவுகள்,சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ் பயன்களை பெற்றுக் கொள்ளும் குடும்பங்கள் மற்றும் நபர்கள் மற்றும் அந்த உதவியைப்பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து காத்துள்ள பட்டியலில் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கு இந்த வேலைத் திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.


ஆறு கட்டங்களாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது கட்டமாக மிகவும் பொருத்தமான குடும்பங்கள் மற்றும் நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விளம்பரங்கள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட உள்ளதுடன் நலன்புரி சபையின் இணையத்தளத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமது பகுதி பிரதேச செயலாளர் அலுவலகம் அல்லது கிராம சேவை அதிகாரி, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, சமூக சேவை அதிகாரி அல்லது வயது முதிர்ந்தோர் ஊக்குவிப்பு அதிகாரி ஆகியோருக்கு சமர்ப்பித்து அவர்கள் உறுதிப்படுத்திய பின்னர் பிரதேச செயலகத்திடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


எத்தகைய அரசியல், கட்சி மற்றும் இன, மத பேதங்களுக்கு அப்பால் தேசிய திட்டமாக அரசாங்கம் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.


இந்த வேலைத் திட்டத்தை சாத்தியமாக முன்னெடுக்கும் வகையில் இளைஞர் சமூகத்தின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.