Header Ads



இலங்கையில் அதிகரித்துள்ள எயிட்ஸ் 2 முக்கிய காரணங்கள் கண்டறிவு


 இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.


எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தற்போது சிகிச்சைகளுக்காக வருகைத் தருவதாகவும் அவர் கூறுகின்றார்.


இலங்கையில் முடக்க நிலையில் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், கல்வி நடவடிக்கைகள் இணைய வழியாக நடத்தப்பட்ட நிலையில், மாணவர்களில் ஒரு பிரிவினர், இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த காணொளிகளை பார்வையிட்டமையும் இதற்கான காரணமாக அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.


''எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இளைஞர்கள் தற்போது பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகை தருகின்றனர். சட்டவிரோதமாக செயல்படும் ஸ்பாக்களுக்கு சென்றவர்களே அதிகளவில் வருகை தருகின்றார்கள்.


ஸ்பா நிலையங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. அதுவும் ஒரு காரணம் என கூற முடிகின்றது. அதேபோன்று, நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணையவழி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


இதில் கல்வியை கற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், பாலியல் சார்ந்த காணொளிகளை பார்த்து, அதனூடாகவும் அதிகரித்திருக்கக் கூடும் என நினைக்கின்றோம். இணையத்தில் காணொளிகளை பார்த்து, அதன் பின்னர் ஸ்பாக்களுக்கு இவர்கள் சென்றுள்ளாதாக நம்புகின்றோம்.


அவர்களுடன் கதைக்கும் போது, எம்மால் அதனை புரிந்து கொள்ள முடிகின்றது. இளைஞர்கள் என்பதனால், பாலியல் ரீதியிலான ஓமோன்கள் அதிகரிக்கின்றமையினால், உணர்வுகளும் அதிகளவில் காணப்படும். அதை கட்டுப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு தெரியாது. பெற்றோரும் இது குறித்து கதைப்பதில்லை. அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் விதம் தொடர்பில் யாரும், அவர்களுக்கு கூறுவதில்லை. அதனால், முடக்க காலப் பகுதியில் இதற்கு இவர்கள் அடிமையாகியுள்ளனர்" என அவர் கூறுகின்றார்.


இலங்கை முழுவதிலும் உள்ள 42 எச்.ஐ.வி மருத்துவ முகாம்களில், 2,350 தொற்றாளர்கள் சிகிச்சைகளை பெற்று வருவதாக டொக்டர் ரசாஞ் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார். எனினும், இலங்கை முழுவதும் 4686 வரையான எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என கணிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சைகளுக்கு வருகைத் தராதவர்கள், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியமையை அறிந்துக் கொள்ளாதவர்களும் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருவதாக அவர் கூறுகின்றார்.


சமூகத்திலுள்ள இவ்வாறான தொற்றாளர்களுடன் பாலியல் தொடர்புகளை பேணுவார்களாயின், அவர்களுக்கும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.



இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 350 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 52 இளைஞர், யுவதிகள் இருப்பதாக டொக்டர் ரசாஞ் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.


2021ம் ஆண்டு 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 25 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அந்த தொகை இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 53ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


2022ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்குள்ளான 30 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் யுவதிகள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


எனினும், இந்த ஆண்டின் எதிர்வரும் சில மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.


எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுவதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாது என கூறிய அவர், அதுவே பாரிய பிரச்சினை எனவும் குறிப்பிட்டார்.


எச்.வி.ஐ தொற்றுக்கு அறிகுறிகள் தென்படாது நிலையில், அது எயிட்ஸ் நிலைக்கு சென்றதை அடுத்தே அதற்கான அறிகுறிகள் தென்படும் எனவும் அவர் கூறுகின்றார்.


எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி, அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு சுமார் 10 வருட காலம் எடுக்கும் என அவர் தெரிவிக்கின்றார்.


பாதுகாப்பற்ற விதத்தில் உடலுறவு தொடர்புகளை பேணியிருப்பார்களாயின், உடனடியாக எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொள்கின்றார்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இரத்த பரிசோதனைகளின் ஊடாகவே எச்.ஐ.வி தொற்றை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்.



''பெற்றோர் இளையோர் தொடர்பில் கூடுதலாக தேடுவதில்லை. கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பாற் சென்று, தேவையற்ற காணொளிகளை பார்வையிட்டு, அதற்கு அடிமையாகுகின்றனர். சமூக வலைத்தளங்களின் ஊடாக, பாதுகாப்பற்ற விதத்திலான உடலுறவு கொள்வதற்க இளைஞர்களை சிலர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இணைய வழியாக கல்வி கற்கும் போது, அதற்கு அப்பாற் சென்றும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும். சில பெற்றோருக்கு அது குறித்து ஆராய்வதற்கான புரிந்துணர்வு கிடையாது. இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், தொடர்ச்சியாக மருந்து அருந்த வேண்டும். அதையும் தவிர்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என அவர் கூறுகின்றார்.


இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?


''பாலியல் கல்வியை நாம் கற்பிக்க ஆரம்பித்துள்ளோம். பாடசாலை கல்வி திட்டத்திலும் உள்ளடக்கியுள்ளோம். அனைவரும் செவிமடுப்பதில்லை. கலாசாரம் பின்பற்றுகின்றமையினால், அந்த கல்வியை கற்பிக்க ஆசிரியர்கள் வெட்கப்படுகின்றார்கள். பாதுகாப்பற்ற உடலுறவுக்கு செல்வது அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்படுத்த பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது குழந்தைகளுடன் வெளிப்படையாக பெற்றோர் பேச வேண்டும். இளைஞர், யுவதிகளின் பாலியல் உணர்வுகளை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது அல்லவா?" என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.


2020ம் ஆண்டு 3994 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த காலப் பகுதியில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களில் 09 ஆண்களும், 01 பெண்ணும் அடங்குவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவிக்கின்றது.


இதேவேளை, 2021ம் ஆண்டில் இந்த தொகையானது 4245 ஆக அதிகரித்துள்ளது.


2021ம் ஆண்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 10 ஆண்களும், 2 பெண்களும் அடங்களாக 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.


அத்துடன், இந்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டவர்களில் 3,000 ஆண்களும், 1245 பெண்களும் அடங்குவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் குறிப்பிடுகின்றது.


இலங்கையில் இதுவரையான காலம் வரை எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 617 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.