250 கடைகளின் உரிமையும், கட்டுப்பாடும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வசமாகியது - வழக்கில் சமரச உடன்பாடு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு – அத்தர் மஹால் விவகாரத்துக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பும், தீர்வையும் வழங்கியது. இதனையடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினால் தனியார் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இரு தரப்பினரும் சமரச முயற்சியினையடுத்து தீர்ப்பினை நிறைவேற்ற இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதனையடுத்து சமரச உடன்பாட்டின் பிரகாரம் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் இணங்கியது. கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றின் நீதிபதி பூர்ணிமா பரணகமகே முன்னிலையில் சமரசம் எட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அத்தர் மஹால் கடைத்தொகுதியின் உரிமையும், கட்டுப்பாடும் உடமையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது.
அத்தர் மஹாலில் ஏற்கனவே வாடகைக்கு அமர்ந்துள்ள சுமார் 250 கடைக்காரர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் புதிய வாடகை ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு உடன்பட்டுள்ளனர்.
நீண்டகாலம் 3 ஆம் தரப்பினரால் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சேர வேண்டிய வருமானங்கள் அனுபவிக்கப்பட்டு வந்தமை, இத்தீர்ப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
2016 தொடக்கம் எவ்வித உடன்படிக்கையும் இன்றி சட்டவிரோதமாக அத்தர் மஹாலின் வருமானத்தை அனுபவித்து வந்த பிரதிவாதி அக்காலப் பகுதிக்குரிய அதாவது 2016ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் சமரச தீர்ப்பு வழங்கியது வரையிலான காலத்துக்கு நிலுவை வாடகையை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு நீதிமன்றில் வழங்கினார்.
ஒரு கோடி 14 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா காசோலை மூலம் வழங்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு குறிப்பிட்ட தீர்ப்பு பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஜமாஅத்தாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறிப்பிட்ட DLM/00015/19ஆம் இலக்க வழக்கு விசாரணைகள் முற்றுப்பெறும்வரை அத்தர் மஹால் கடைத்தொகுதியை மூடிவிடும் படி பிரதிவாதியான குத்தகைக்காருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றின் நீதிவான் ஆர்.எம்.ஒகஸ்டா அத்தபத்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்வுத்தரவு 2022.05.25ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதிவாதியான குத்தகைக்காரருக்கு எதிரான வழக்கு பள்ளிவாசல் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹிதாயத்துல்லா மூலம் தாக்கல் செய்யப்பட்டு கொண்டு நடத்தப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றில் பள்ளிவாசல் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் ஆஜராகியிருந்தார். பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சித்தீக் ஆஜராகியிருந்தார்.
மேலும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் நிர்வாகிகளான தெளபீக் சுபைர், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் நிஹார், பாரிஸ் சஹ்மி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதியும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.– Vidivelli
மேன்மை தங்கிய கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு எமது பணிவான மரியாதையும் நன்றிகளும் உரித்தாகட்டும். பள்ளிவாயலின் சொத்துக்களை பலாத்காரமாக அனுபவிப்பவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வுக்கு மிகவும் தூரமாகவும் அவனைப் படைந்த இரட்சகனின் கட்டளைகளை முற்றிலும் புறக்கணிப்பவனாகவும் இருக்கின்றான் என்பது தௌிவாகப் புலனாகின்றது. உண்மையில் ஒவ்வொருநாளும் அந்த நபர் முட்கள் நிறைந்த கள்ளிமரத்தைச் சாப்பிட்டு நரக நெருப்பில் சூடாக்கிய கடும் சூடான கொதி நீரையும் மறுமையில் உற்கொள்ள முன்னர் உலகிலேயே அனுபவித்து வருகின்றார். அவருடைய இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்பதை அவருக்கு அண்மையில் இருப்பவர்கள்,அடுத்தவர்களுக்குப் படிப்பினையாக அவதானித்து பொதுமக்களுக்கு அறிவுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இது போன்ற பொதுச் சொத்துக்களை பலாத்காரமாக சொந்தம் கொண்டாடுபவர்கள் உடனடியாக அந்த பாவத்திலிருந்து தவிர்ந்து உரிய சொத்துக்களை சொந்தக்காரர்களான பள்ளிவாயல்கள், தனியார்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். இத்தகைய பெரும் பாவங்களில் முஸ்லிம்கள் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் அன்புடன் வேணடிக் கொள்கின்றேன்.
ReplyDelete