மௌலவிகள் உட்பட 25 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதலுக்கு சதி மற்றும் ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மௌலவிகள் உட்பட பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகளான தமித் தொட்டவத்த (தலைவர்) அமல் ரணராஜா மற்றும் நவரட்ன மாரசிங்க அடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கைகள் தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்தார்.
அதனையடுத்து, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு, நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, நீதிபதிகள் குழாம் திகதியை நிர்ணயித்தது.
நௌபர் மௌலவி, சஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, மொஹமட் சனாஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 270 பேர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Post a Comment