2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே எனது இலக்காகும் - ஜனாதிபதி
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும் எனவும், அதற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பயணத்தில் இளைஞர்களுக்கான மேடை ” எனும் தலைப்பில் இளைஞர்களுடன் Zoom ஊடாக கடந்த (22ஆம் திகதி) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன் போது இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் கீழே தரப்படுகின்றன.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டின் இளைஞர்களுக்கு நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் கூறுகின்றீர்கள். 1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் இளம் தலைவராக முன்வருவதற்கு உங்களுக்கு வாய்ப்பளித்தார். 2048இல் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவது உங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான இளைஞர்களை தயார்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதா?
பதில்: முதலாவதாக, நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். நான் நாட்டை பொறுப்பேற்ற போது நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த நிலையில் இருந்து மீள முடியாவிட்டால் எமக்கு எதிர்காலம் கிடையாது.
நாட்டில் ஏற்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் நான் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்று வங்குரோத்து பொருளாதாரத்திற்கு பதிலாக அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை பெறுவதற்கான செயற்பாடுகளை முதலில் திட்டமிட்டேன். அதில் பங்களிப்புச் செய்வதற்கு நம்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
அதற்காக ஒவ்வொரு பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிலும் ஐந்து இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன். கண்காணிப்புக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தெரிவு இன்னும் நிறைவடையவில்லை.
மேலும் இளைஞர் பாராளுமன்றத்தை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கிறோம். உத்தேச மக்கள் சபையின் மூலம் புதிய இளைஞர்கள்களுக்கு முன்னோக்கி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட, வன்முறையில் ஈடுபடாத குழுக்களையும் இதில் பங்கேற்க அழைத்துள்ளோம். இந்த நடவடிக்கை நமக்கு தேவையான புதிய தலைமையை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதற்கான பாதையை இப்போது தயார் செய்து வருகிறோம் .
கேள்வி: இந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் தலைமுறையினர் பங்களிப்பதற்கு ஏதேனும் விசேட நடைமுறை திட்டம் உள்ளதா ?
பதில்: நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய, இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அழைப்பிற்காக காத்திருக்காமல் அந்த வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும்.
கேள்வி: இன்று நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜே.ஆர். ஜெயவர்தனவும் எதிர்கொண்டார். அவரிடமிருந்து அன்று நீங்கள் பெற்ற படிப்பினைகளின் ஊடாக இலங்கையின் எதிர்காலம் பற்றி நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள். அவருடைய பாதையைப் பின்பற்றி வெளியுறவுக் கொள்கையைத் தொடர்வீர்களா?
பதில்: சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சவால்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. இந்த நூற்றாண்டில் நமது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், போருக்குப் பின்னரான நவீனமயமாக்கலுடன் நாம் எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான். அன்று நாம் அதற்குத் தயாராக இல்லை. போருக்குப் பிறகும் நாங்கள் அதே பழைய எண்ணங்களுடனும் விருப்பங்களுடனும் இருந்தோம். அந்த உலகம் இப்போது முற்றிலும் உருமாறிவிட்டது. ஏனென்றால் கடன் சுமையுடன் முன்னோக்கிச் செல்ல முடியாது.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் கனவு உலகில் இருந்தோம். அந்தக் கனவு உலகத்திலிருந்து வெளிவர வேண்டும். ஜே.ஆர் ஜெயவர்தன 1977 இல் ஆட்சிக்கு வந்து, திறந்த பொருளாதாரத்தை ஆரம்பித்தார்.
சீனா திறந்த பொருளாதாரத்துடன் முன்னேறியது. இந்தியா இப்போது அந்த வளர்ச்சியை நெருங்கி வருகிறது. வியட்நாம் போருக்குப் பிறகு அழிந்த நாடு. ஆனால் அவை இன்று மேம்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு எமது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தது. 2019 இலும் இந்த நவீனமயமாக்கலுக்கு மக்கள் தயாராக இல்லை. 2019ல் முன்னெடுத்த வரிக் கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்போது இந்த நாட்டின் இளைஞர்கள் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர். எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று சில இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். மற்றொரு குழு எதிர்காலத்தை உருவாக்க காத்திருக்கிறது. அந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ஏனைய தலைவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, உணவுப் பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் எதிர்வரும் ஆண்டிற்கான விவசாயக் கொள்கை என்ன என்பதைப் பற்றி அறிய விரும்புகின்றோம்.
பதில்: உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். மேலும் விவசாயத்திற்கு தேவையான உரம் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. தற்போது உரம் பெற தேவையான டொலர்கள் கிடைத்துள்ளன. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளதால், தற்போது உரத்தை வாங்க முடியும்.
விவசாயத்திற்கு தேவையான எரிபொருளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் நவம்பர் 15ஆம் திகதிக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குத் தேவையான அளவு உரம் நாட்டுக்கு கிடைக்கும். அடுத்த ஆண்டு முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முழுமையான உணவு உற்பத்தியைத் தொடங்குவது எங்கள் திட்டமாகும். தற்போது நெல் உற்பத்தியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சோளம் உள்ளிட்ட ஏனைய பயிர்ச் செய்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி: வெளிநாட்டுக் கடன்களுக்குப் பதிலாக வெளிநாட்டு முதலீடுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளீர்கள். வெளிநாட்டு முதலீடுகள் குறித்த உங்கள் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும், அதற்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெறுவதற்கான முன்மொழிவுகள் என்ன என்பதையும் அறிய விரும்புகிறோம்?
பதில்: இன்று அனைத்து நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுத்தான் வளர்ச்சி அடைந்துள்ளன. கடன் வாங்குவதன் மூலம் அல்ல. அந்நிய முதலீட்டால் சீனா முன்னேறமடைந்தது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா தாமதமாக செயற்பட்டதால் இந்தியாவை விட சீனா துரிதமாக முன்னேறியுள்ளது. வியட்நாமும் வெளிநாட்டு முதலீடுகளால் முன்னேறிய நாடு. அந்நிய முதலீடு இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது.
யுத்தத்தின் பின்னர் வெளிநாட்டுக் கடன்களை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சித்தோம். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. 2015இல் தீர்வு காணும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தாலும், அதனை முன்னெடுக்க முடியவில்லை. அதனால்தான் இன்று இந்த நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, அடுத்த சில மாதங்களில் தற்பொழுதுள்ள பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, மசகு எண்ணெய் பிரச்சினையில், நாங்கள் இப்போது ரஷ்யாவை நோக்கி திரும்பியுள்ளோம். மேலும் நீண்ட காலத்திற்கு மசகுஎண்ணெய் நமக்கு கிடைப்பது குறித்து அவர்களுடன் ஆலோசித்து வருகிறோம். கடன் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: பெரும்பாலான மசகு எண்ணெய், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ரஷ்யாவிடமும் கடன் வசதிகளைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெறுவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, எதிர்வரும் நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க எதிர்பார்த்துள்ளனர். இவர்களை இலக்காகக் கொண்டு இலங்கை ஏதேனும் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தை முன்வைத்துள்ளதா ?
பதில்: சுற்றுலாவை மேம்படுத்த இந்த ஆண்டு திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் அதன் பெறுபேறுகளை காணலாம் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செய்வது என்று ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். அடுத்த ஆண்டுக்குள் இந்த இலக்குகளை அடைய முடியும் என்று நம்புகிறேன்.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, போராட்டத்தில் பல்வேறு இளைஞர் குழுக்கள் இணைந்திருந்தன. உள்நோக்கம் கொண்ட குழுக்கள் இருந்தன. நாட்டின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் குழு ஒன்று இதில் பங்கேற்றிருந்தது. அந்த இளைஞர் குழுக்களுக்கு அழைப்பு விடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?
பதில் : அந்த அழைப்பை நான் முன்பே செய்துள்ளேன். அந்த குழுக்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அத்துடன், போராட்டத்தில் வன்முறையைக் கையில் எடுத்து, வழிதவறிச் சென்ற இளைஞர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட நல்லவர்களுடனும், போராட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களுடனும் கலந்துரையாட விரும்புகிறோம். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்ற குழுக்கள் வேண்டுமானால் தவறை ஏற்று எம்முடன் இணையும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் நாட்டுக்கு கேடு செய்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரம் கடினமாக இருக்கும்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது எந்த நாட்டிலும் நடக்கும் ஒன்று. ஆனால், அதற்கெதிராக வன்முறைகள் நடத்தப்படுமானால், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தாங்கள் தவறு செய்ததை உணர்ந்துள்ளவர்களுடன் கலந்துரையாடுவோம்.
2048 ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற கடந்த 45 வருடங்களாக முயற்சி செய்து வரும் ரணில் மற்றுமொறு வாக்குறுதியை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியுள்ள ஐ.தே.க உம் ஏனைய கட்சிகளுக்கும் இந்த வாக்குறுதி பொறுத்தமாகும். இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்த கொழும்பு வாழ் மக்கள் கடந்த பொதுத்தேர்தலில் சரியான பாடத்தை ரணிலுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த பாடத்தையும் மறந்த ரணில் தற்போது புதிய உலகத்தில் இருந்து வந்து பழைய வாக்குறுதி மூலம் பொதுமக்களையும் குறிப்பாக கொழும்பு வாழ் வாக்காளர்களையும் ஏமாற்றும் முயற்சியின் விளைவை அடுத்த பொதுத் தேர்தலில்தான் கண்டு கொள்ளலாம். அப்படியான ஒரு தேர்தல் ரணிலின் வாழ்நாளில் நடைபெற மாட்டாது என பெரும்பாலான பொதுமக்கள் கூறுகின்றனர்.
ReplyDelete