15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
நான்கு வருடங்களாக சிறுவனை கொடூரமாக தாக்கிய சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று களனி திப்பிட்டிகம பிரதேசத்தில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் வளர்ந்து வந்த வீட்டின் உரிமையாளர்கள் இவ்வாறு சிறுவனை தாக்கி சித்திரவதை செய்து, வீட்டில் வேலைகளை செய்வித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட பின்னர், அவரது கணவன் பிள்ளையை விரும்பவில்லை என்பதால், தாய், சிறுவனை வளர்ப்பதற்காக அயல் வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் களனி திப்பிட்டிகம பிரதேசத்தில் அயல் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் அன்றில் இருந்து வீட்டின் உரிமையாளரான பெண், அவரது கணவர் மற்றும் மகள் ஆகியோரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளார்.
அத்துடன் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலைகளை செய்யவும் நேரிட்டுள்ளது. இவ்வாறு தும்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சிறுவனின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்த பாடசாலையின் ஆசிரியர்கள் அது குறித்து சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுவன் அடிக்கடி தாக்குதல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.களனி தலுகம புனித பிரான்சிஸ் பாடசாலையில் பயிலும் 15 வயதான இந்த சிறுவன் கண்ணீர் விட்டு, தான் எதிர்நோக்கிய கசப்பான சம்பவங்களை கூறியுள்ளார்.
“தொந்தரவு கொடுக்காது உடனடியாக விஷ போத்தலை எடுத்து குடி” என்று தான் வசித்து வந்த வீட்டினர் கூறியதாக சிறுவன் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தாயை பாடசாலைக்கு அழைத்து தெளிவுப்படுத்திய போதிலும் அந்த பெண் அது குறித்து அக்கறை காட்டவில்லை.
இதனையடுத்து சிறுவன் வசிக்கும் வீட்டின் பெண்ணுக்கு தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது அந்த பெண் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஆசிரியர்கள் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாடுகளை அடுத்து பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் போது நடத்தப்பட்ட விசாரணைகளில் சிறுவன் நீண்டகாலமாக தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.சிறுவன் வசித்த வீட்டின் பெண் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் அவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தற்போது சிறுவன் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், சிறுவன் வாழ்ந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது தாய் ஆகியோர் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தமரா துஷாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment