Header Ads



பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் தவறாக சிறையில் இருந்தவர் 13 ஆண்டுகளின் பின் விடுவிப்பு


-சி.எல்.சிசில்-


15 வயது பாடசாலைச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் அநியாயமாக சிறையில் இருந்தவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;


2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எஹலியகொடவைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கால்நடை மேய்ப்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் மலைப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.


விசாரணைகள் அப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர் ஒருவரைக் கைது செய்ய வழிவகுத்ததுடன் பாதிக்கப்பட்டவரின் டிஎன்ஏ பரிசோதனையைத் தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


சிறிது காலத்தின் பின் அவருக்கு பிணை கிடைத்தாலும், யாரும் பிணை வழங்க முன்வராததால் அவர் சிறையில் வாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


இந்நிலையில், 90 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம், பாடசாலை மாணவியின் கொலையின் பின்னணியிலுள்ள உண்மையான சந்தேக நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.


விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிரேமசிறி சேனாநாயக்க என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், கொலை தொடர்பில் முதலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேய்ப்பரைச் சந்தித்து, தான் பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்ததாகத் தெரிவித்திருந்தார்.


இந்தக் கூற்றைக் கேள்வியுற்ற மற்றுமொரு கைதி சிறையிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து எஹலியகொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.


15 வயதுடைய பாடசாலை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரேமசிறி சேனாநாயக்கவே சந்தேக நபர் என்பதை புதிய விசாரணைகள் மற்றும் DNA பரிசோதனை என்பன உறுதிப்படுத்தியுள்ளன.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண் டுள்ளதுடன், சம்பவத்தின் போது அவருக்கு 26 வயது எனவும் தெரியவந்துள்ளது.


தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.