இலங்கை மக்கள் பழிவாங்கல், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக அறிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதை இந்த அறிக்கை விபரிக்கிறது.
தடுத்து வைத்தல் கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன.
இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.
பழிவாங்கலுக்கு எதிராக உறுப்பு நாடுகளின் உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் பொதுமக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையில் நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது வீட்டுக் காவலில் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகளில் தொடர்ச்சியான மற்றும் இதே போன்ற அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
முன்னைய ஆண்டுகளைப் போலவே பழங்குடி மக்கள் சிறுபான்மையினர் அல்லது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறைகளுடன் பணிபுரிபவர்கள் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களையும், பெண் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புபவர்களின் பாதுகாப்பை, உறுதிசெய்ய தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபை பணியாற்றுவதாக பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்தபோது தெரிவித்துள்ளார்.
இலங்கை,ஆப்கானிஸ்தான்,பஹ்ரைன், பங்களாதேஸ், பெலாரஸ், பிரேசில், புருண்டி, கெமரூன், சீனா, கியூபா, சைப்ரஸ், ஜனநாயகக் குடியரசு கொங்கோ, ஜிபூட்டி, எகிப்து, குவாத்தமாலா,இந்தியா, இந்தோனேசியா, ஈரான் இஸ்லாமிய குடியரசு, இஸ்ரேல், கஸகஸ்தான், லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசு, லிபியா, மாலத்தீவு,மாலி, மெக்சிகோ, மொரொக்கோ, மியான்மர், நிக்கரகுவா, பிலிப்பைன்ஸ், ரஸ்ய கூட்டமைப்பு, ருவாண்டா, சவுதி அரேபியா, தெற்கு சூடான், சூடான், பாலஸ்தீனம், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், பொலிவேரியன் குடியரசு வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஏமன் போன்ற நாடுகளை பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment