Header Ads



நீங்கள் சர்வதேசத்துக்கு வழங்கும் செய்தி, இதுவா என்று கேட்க விரும்புகின்றேன்..?

 


ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று -01- அவர் மேலும் தெரிவிக்கையில்,


"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இது ஜனாதிபதி எதிர்பார்க்கும் நாட்டின் சட்டம் - ஒழுங்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரிய சவாலாக அமையும். இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியும், அவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் தீர்மானத்துக்குக் கையெழுத்திடுவதும் சவாலானது. நீங்கள் சர்வதேசத்துக்கு வழங்கும் செய்தி இதுவா என்று கேட்க விரும்புகின்றேன்.


ஜனாதிபதி தனது இந்தப் போக்கை மாற்றியமைத்துப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தீர்மானங்களை மீளாய்வு செய்து வரவு - செலவுத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் என்று நினைக்கின்றேன்.


இதேவேளை, சில நபர்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் அப்பாவிகளும் உள்ளனர்.


அப்பாவி மாணவர்களும் உள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகள் சாட்சிகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் செய்யப்பட்டவையா என்று கேட்கின்றோம். இதனால் அப்பாவிகளைத் தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.