மலட்டு மாத்திரை கொண்டு வந்ததாக, டொக்டர் சாபியை கூறியவர் உப செயலாளராக உள்ளார் - சாணக்கியன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்தார்.
இளம் கிரிக்கெட் அணி நாட்டின் கிரிக்கெட்டை முன்னோக்கி இட்டுச்செல்வதை காண்கின்றோம். அதேபோன்று, நாட்டின் அரசியலையும் இளம் அணியிடம் கையளிக்குமாறு நான் இந்நாட்டு மக்களிடம் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்
என சாணக்கியன் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
மாறுபட்ட கோணத்தில் புதிய பயணத்தை இளம் தரப்பினராலேயே மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் நாட்டு மக்களிடம் போசாக்கின்மை ஏற்படும் நிலையை உருவாக்கி, அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் ஒரு முறை புதிய அரசியல் நாடகத்தை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளதாகவும் அத்தகைய நபர்கள் இணைந்து மேலவை இலங்கை கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.
வாளை சுமந்துகொண்டு 'சிங்க லே' என கூறியவர் செயலாளராகவுள்ளார். இந்தியாவிடமிருந்து முதலீடு வந்து நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்தபோது RAW முகவர் என கூறியவர் செயலாளராக உள்ளார். மலட்டு மாத்திரை கொண்டு வந்ததாக டொக்டர் சாபியை கூறியவர் உப செயலாளராக உள்ளார். IMF-இற்கு சென்றால் நாடு அழிந்துவிடும் என கூறியவர் மற்றுமொரு உப தவிசாளராக உள்ளார். இவ்வாறான ஏமாற்று பேர்வழிகளை மீண்டும் இந்த நாட்டு மக்கள் நம்பக்கூடாது
என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment