Header Ads



ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெருக்கடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ள இலங்கை


 போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 


நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில், இலங்கை அதிகாரிகள் போராட்டங்களை கடுமையாக  கட்டுப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெருக்கடிகளை கட்டவிழ்த்து  விட்டுள்ளதாக மன்னிப்புச் சபையின் புதிய  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதுடன், அவர்கள் மீது அதிகாரத்தை பிரயோகித்ததாகவும் இராணுவத்தை பயன்படுத்தியதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்தும் உரிமை மக்களுக்கு உள்ளதாகவும் அத்தகைய உரிமைகளை எளிதாக்கும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும்  சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 


இலங்கை அதிகாரிகள்  தொடர்ந்தும் சளைக்காமல்  மக்களின் குரலை நசுக்கியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார். 


இலங்கையின் புதிய அரசாங்கம் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு சட்டவிரோத பலவந்தம், மிரட்டல், துன்புறுத்தலை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா, அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை மிக அடிப்படையான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து வௌிப்படையான, பாரபட்சமற்ற விசாரணைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.